முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன் தரப்பில், கடந்த 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இதுவரை மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ள அவர், சிறை நடத்தை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து உள்ளார். அவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில், ஏற்கெனவே அரசுத் தரப்பில் பேரறிவாளனுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்குப் பிணை வழங்க கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டனர்.
இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர்த் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கோபால் சங்கரநாராயணன் அவர்களுக்கும், எனது அன்புத் தம்பிகள் வழக்கறிஞர்கள் பாரிவேந்தன், பிரபு இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வழக்கின் விசாரணை வளையம் முழுமையாக விரிவடையாத நிலையில், நேர்மையாக விசாரணை இதுவரை நடத்தப்படாத சூழலில், செய்யாத குற்றத்திற்காக முப்பது ஆண்டுகாலத்தைச் சிறைக்கொட்டடிக்குள்ளேயே கழித்த தம்பி பேரறிவாளனுக்குத் தற்போது பிணை கிடைத்திருப்பது பெரும் ஆறுதலைத் தருகிறது.
கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடந்தேறிய சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும்.
தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிற பிணை எனும் தற்காலிகத்தீர்விலிருந்து விடுதலை என்பதனை நோக்கி நகர்த்திச்செல்வதே முழுமையான மகிழ்ச்சியைத் தரும் நல்லறிவிப்பாகும். அதனை சாத்தியப்படுத்த தம்பி பேரறிவாளனுக்கு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.