உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் விவரம்

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் (சோனிலால்) 12, நின்ஷாத் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக கூட்டணி 274 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 8, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரசுக்கு 2 இடங்களும் பகுஜன் சமாஜுக்கு ஓரிடமும் மட்டுமே கிடைத்தன.

உத்தராகண்டில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. எனினும், அந்த மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கதிமா தொகுதியில் காங்கிரசு வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். காங்கிரசு 19, சுயேச்சைகள் 2, பகுஜன் சமாஜ் ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வர் பிரமோத் சாவந்த், சான்குலிம் தொகுதியில் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரசு 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2 இடங்களிலும் கோவா பார்வர்டு, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஆகியவை தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன

அங்கு ஆட்சியமைக்க 21 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு உறுப்பினர் குறைவாக உள்ளது. இந்தச் சூழலில் 3 சுயேச்சைகளும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 2 உறுப்பினர்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பாஜக தனித்துப் போட்டியிட்டு 32 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 7, ஐக்கிய ஜனதா தளம் 6, காங்கிரசு 5, நாகா மக்கள் முன்னணி 5, சுயேச்சைகள் 3, குகி மக்கள் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மணிப்பூரில் ஆட்சியமைக்க 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கடந்தமுறை கூட்டணி ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தூரி தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆளும் காங்கிரசுக்கு 18 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார். மாநில காங்கிரசுத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங், பாட்டியாலா தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

சிரோமணி அகாலிதளத்துக்கு 3, அதன் கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தன. பாஜக 2 இடங்களிலும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Response