மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் – தப்பிப்பாரா? தண்டனை கிடைக்குமா?

தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளிக்கும்போது ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக அப்போது ஆளுநர் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதளத்தில் பக்கத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டார்.

அதனால், பா.ஜ.க பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது காவல் துறையிடம் புகார்கள் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கி மன்னிப்பும் கேட்கபட்டது. நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி.சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் இதுதொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையொட்டி, அதிமுக ஆட்சி இருக்கும்வரை இவ்விசயத்தில் அலட்சியமாக இருந்த எஸ்.வி.சேகர், இப்போது மன்னிப்பு கேட்டு வழக்கில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

நீதிபதி அந்த மன்னிப்பைக் கணக்கில் கொள்ளாமல் தண்டனை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

Leave a Response