மாவீரர் நாள் என்பது தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சி நாள் – சீமான் பேச்சு

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை திருப்பூர் தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காலையில் 67 பேர் கண் தானம், 67 பேர் இரத்த தானம் செய்தனர். மாலையில் தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி அனைவரும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது…..

சாதி, மதத்தின் பெயரால் தமிழன் வேறுபட்டுள்ளான். மற்றவர்கள் உயிர் வாழத் தனது உயிரைக் கொடுத்து காப்பவனே உண்மையான வீரன். தமிழ் இளம் தலைமுறையினர் சாதி, மத உணர்வைத் தூக்கி எறிய வேண்டும். தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் ஒன்றிணைந்தால் அரசியல் வலிமை பெறும். அதன்பிறகு அதிகாரம் வலிமை பெறும். அதன்பிறகே தேச விடுதலை பெற முடியும்.

எந்த வேலையும் இழிவல்ல. எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே இழிவாகும். வேலை செய்யாமல் இருக்க, இருக்க, வடநாட்டுக்காரர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சொந்த மண்ணில் அகதியாகும் நிலை ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்று வேலை செய்யக்கூடாது. யாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் இனத்துக்காகப் பாடுபட வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி எழுச்சி பெறும். தமிழ் இனத்தின் விடுதலைக்குக் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை பாடுபடுவேன். அடுத்த தலைமுறையினருக்கும் தமிழ் இனத்தின் விடுதலையை எடுத்துக்கூற வேண்டும். மாவீரர் நாள் என்பது தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சி நாளாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response