1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (28-9-2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழகக் காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், பள்ளிகல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, அறநிலையத் துறைச் செயலாளர் சந்திரமோகன், பொதுத் துறைச் செயலாளர் ஜெகன்நாதன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கொண்டனர்.

அந்தக்கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்….

மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

அதே போல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும்.

அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response