எச்.ராஜா மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் – சுப.வீரபாண்டியன் அதிரடி

எச்.ராஜா மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்/

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

அன்புடையீர் வணக்கம்,

27/09/2021 அன்று சமூக வலைத்தளங்களில் பிஜேபியைச் சேர்ந்த எச்ராஜா, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காணொளி வெளியாகி உள்ளது. அதில் என்னைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு, ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாகப் பொய் பேசுவதால், சுப.வீரபாண்டியனின் மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையமான அறிவாலயத்தில் உட்கார்ந்துகொண்டு சுப.வீரபாண்டியன் பிச்சை எடுக்கிறான் என்றும் ஒருமையில் என்னை அவதூறாகப் பேசியுள்ளார்.

மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரையும் நோக்கி எல்லா பத்திரிகையாளர்களும் பிரஸ்ட்டிடியூட்ஸ் (Presstitutes) என்று கூறியுள்ளார். Presstitutes என்றால் பணத்திற்காக பொய்யான மற்றும் மோசமான செய்திகளை வெளியிடுபவர்கள் என்று பொருள் என்பதை அறிவோம். அந்தச் சொல்லின் மூலச் சொல்லாக, Prostitutes என்பது உள்ளது என்று அதற்கான விளக்கங்களை இணையங்களில் காணமுடிகிறது

இவ்வாறாகப் பத்திரிகையாளர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி, எச்.ராஜா பேசியுள்ளது கருஞ்சட்டைத் தமிழர் என்ற மின்னிதழ் ஆசிரியராக உள்ள எனக்கும் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன்.

எனவே மேற்கண்டவாறு என்னை அவதூறு செய்தும், எனது நற்பெயரைக் கெடுக்கும் விதமாக பொதுமக்கள் மத்தியில், அவப்பெயர் உண்டாக்கத் திட்டமிட்டு கெட்ட நோக்கத்துடன் பேசியும் உள்ள எச்.ராஜா மீது சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் நண்பகல் 12 மணி அளவில் புகார் அளிக்க உள்ளேன்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response