தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் – தலைமையேற்கிறார் டிடிவி.தினகரன்

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவைக் கண்டித்தும், ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அமமுக சார்பில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அமமுக தலைமைக்கழகம் இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிவிப்பில்….

தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதிநீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் கர்நாடகா, இப்போதும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது.

இதனைக் கண்டித்தும், மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவிரி பிரச்சினையில் உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை நமக்குப் பெற்று தந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அமமுகவின் சார்பில் வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்கவிருக்கிறார்.

தமிழகத்தின் உரிமையைக் காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாக கடைப்பிடித்து மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response