மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 14 – அட்டவணை வெளியீடு

.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 8 அணிகள் இடையிலான 14 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டிகள் கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்டது. 4 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்தத் தொடர் மே 2 ஆம் தேதியோடு தள்ளிவைக்கப்பட்டது. அப்போது 29 தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்திருந்தன.

இதையடுத்து இறுதிப்போட்டி உள்பட எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய மட்டைப்பந்து வாரியம் நேற்று வெளியிட்டது.

அதன்படி,

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதிவரை எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன.

மீண்டும் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை துபாயில் எதிர்கொள்கிறது. மறுநாள் (செப்.20) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் அபுதாபியில் மோதுகிறது. இறுதிப்போட்டி துபாயில் அரங்கேறுகிறது.

இந்திய நேரப்படி தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். ஒரே நாளில் 2 போட்டிகள் இருக்கும்போது முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்குத் தொடங்கி நடக்கும். மொத்தம் 7 நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

துபாயில் 13 ஆட்டங்களும், சார்ஜாவில் 10 ஆட்டங்களும், அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் தற்போது புள்ளிப் பட்டியலில் டெல்லி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும் (6 வெற்றி, 2 தோல்வி), சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் (5 வெற்றி, 2 தோல்வி), பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் (5 வெற்றி, 2 தோல்வி, மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன்4-வது இடத்திலும் (4 வெற்றி, 3 தோல்வி) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response