கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகுகிறார்? மகனுக்குப் பதவி?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு.அவருக்கு எதிராக பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.

அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடப்பொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.இந்நிலையில் எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்போதே எடியூரப்பா பதவி விலகவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதன்பின்னர், நேற்றிரவு (ஜூலை 21,2021) அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்குச் சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் அவர் பதவி விலகுவது உறுதியாகியுள்ளது என்கிறார்கள்.

அதேசமயம் தனது மகன் விஜயேந்திராவுக்கு கர்நாடக மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response