ஓர் அதிகாரியின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஆர் எஸ் எஸ் தலைவர் வருகை – மதுரை பரபரப்பு

மதுரையில் நடைபெறும் நான்கு நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இந்தநிலையில், மதுரையில் மோகன் பகவத் செல்லும் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், ‘மதுரை மாநகராட்சி மண்டலம் சத்யசார் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிவரை நேரில் கலந்துகொள்ள உள்ளார்.எனவே, அவருடைய வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில் சாலைகளைச் சீரமைத்தல், தெரு விளக்குகளைப் பராமரித்தல், சாலைகளைச் சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளைச் செய்திடவேண்டும்.அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணித்தல் போன்ற பணிகளைக் கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உதவி ஆணையர் பெயரில் வெளியான இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவில், ‘அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இருக்கும் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்துவரும் சண்முகம் 21.07.21 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சி பணிகளில் இருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது.தனியர் தமது நியமன அலுவலர் முன்பு ஆஜராகவேண்டியது என்று கூறியுள்ளார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “சரியான செய்தியை இந்த உத்தரவு மொத்த அரசு நிர்வாகத்துக்கும் வழங்குகிறது.வரவேற்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தலைவரின் மதுரை வருகை ஓர் அதிகாரியின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response