ஈரோடு மாவட்ட அதிமுக குழப்பம் – எடப்பாடிக்குச் சிக்கல் பரிகாரம் செய்யும் கே.சி.கருப்பணன்

ஈரோடு மாவட்டம், பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவருமான கே.சி.கருப்பண்ணன், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று மதியம் தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். பகல் 2.30 மணியளவில் நடந்த உச்சிகால பூஜையின்போது, மூலஸ்தானம் அருகே மனைவியுடன் தரையில் அமர்ந்து தரிசனம் செய்தார். அப்போது தனது கல்வி நிறுவனங்கள் பெயரில் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. தரிசனம் முடிந்த பின், உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் உள்ள அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் வீட்டுக்குச் சென்றார்.

முன்னாள் அமைச்சர் கே.கருப்பணன் திடீரென குச்சனூர் கோயிலில் தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த கே.சி.கருப்பண்ணன், சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்தார். பின்னர் எடப்பாடி அமைச்சரவையிலும் அமைச்சராகத் தொடர்ந்தார். அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையால் மோதல் அதிகரித்துள்ளது. சசிகலாவும் அதிமுகவைக் கைப்பற்ற அவ்வப்போது நிர்வாகிகளிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், யார் பக்கம் சாய்வது என்ற மனக்குழப்பத்தில் கே.சி.கருப்பண்ணன் இருப்பதாகவும், அதைத் தீர்க்க கோயிலில் வந்து வேண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும், கருப்பண்ணனுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நீடித்து வந்தது. இதனால் இவர் கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் சேர்ந்தார். அவருடன் 906 அதிமுக நிர்வாகிகள் சேர்ந்தனர். ஆனால் அதில் 136 பேர் கருப்பண்ணனின் பவானி தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஈரோடு மாவட்ட அதிமுகவினர் திமுகவில் இணையக் காரணமே கருப்பணனின் ஆதிக்கத்தால்தான் என்று சொல்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் உறவுக்காரர் என்கிற மமதையில் கருப்பணன் தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டதால்தான் ஈரோடு அதிமுகவினர் திமுகவை நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இது எடப்பாடி பழனிச்சாமிக்கே சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதால் அதிலிருந்து இருவரும் மீள்வதற்காகவே இக்கோயில் பூஜை பரிகாரம் எல்லாம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response