சூர்யா மீது சட்ட ரீதியான நடவடிக்கை – பாஜக தீர்மானத்தால் பரபரப்பு

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள ஒருசில அம்சங்களைப் படைப்பாளிகள், திரையுலகினர் எதிர்த்து வருகின்றனர்.

ஒரு திரைப்படத்திற்கு அங்கீகாரமே மத்திய அரசின் தணிக்கைக்குழுதான். தணிக்கை செய்யப்பட்ட படம் திரைக்கு வந்தபின் அதை ஆட்சேபித்து யாராவது மத்திய அரசில் புகார் அளித்தால் மீண்டும் திரைப்படத்தை தணிக்கைக்கு உட்படுத்த முடியும். இதன் மூலம் திரைப்படம் எடுப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று திரைத்துறையினர் எதிர்த்து வருகின்றனர்.

இந்த மசோதாவை எதிர்த்து பல்வேறு திரைக்கலைஞர்கள் பேசிவருகிறார்கள். நடிகர் சூர்யாவும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக… அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யாவின் விமர்சனத்தால் கோபமடைந்திருந்த பாஜகவினர் நேற்று இளைஞரணிக் கூட்டத்தில் சூர்யாவுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற பாஜக இளைஞரணிச் செயற்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானமாக நடிகர் சூர்யாவை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருகிறார். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காகத் தொடர்ந்து எதிர்க்கிறார்.

நடிகர் சூர்யாவிற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து, விமர்சனம் வைக்கும் நிலையில் நடிகர் சூர்யா மீது மட்டும் எதிர்ப்பைக் காட்டுவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணனின் ட்விட்டர் பதிவு வருமாறு:

திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்குக் குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால், அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்துரிமைக்கும் எதிராகச் செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.

விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறைக் கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் எச்சரிக்கை.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கெதிராக பாஜக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response