திமுகவில் இணைகிறார் தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தோப்பு வெங்கடாசலம்.அதனால் ஜெயலலிதாவால் அமைச்சராக்கப்பட்டார். அதற்கு அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றக் காரணமாக இருந்ததுடன், பெருந்துறை தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆனால் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தனக்கு அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த தோப்பு வெங்கடாசலத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இருப்பினும், சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுக்காமல் ஜெயக்குமார் என்பவரை போட்டியிட வைத்தது அதிமுக தலைமை.

இதனால், பெருந்துறையில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் தோப்பு வெங்கடாசலம்.அதனால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்டார்.

தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். அதனால் அமைதியாக இருந்த தோப்புவெங்கடாசலம் திமுகவில் இணைய முடிவெடுத்திருக்கிறாராம். திமுக தலைமையும் அவரது வருகையை ஒப்புக்கொண்டதால் விரைவில் இணைவார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response