அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் விஜயகாந்த் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தரப்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளும் இருப்பதால் இவ்வளவு இடங்களைத் தர முடியாது என அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டுமென அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையின்போது அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தியது.

அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் வரையிலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிகவுக்கு வழங்க முன்வந்திருப்பதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து, இந்தக் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு (மார்ச் 7) நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். இதன் பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வமான ஓ.பன்னீர்செல்வத்தை தேமுதிக நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர். ஆனாலும், இந்தக் கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தேமுதிக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் (மார்ச் 8) நிறைவடைந்தது. இதில், அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 09) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா, கூட்டணியில் தொடரலாமா என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்போம் என, மாவட்டச் செயலாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து,விஜயகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில்….

அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கையும் கேட்ட தொகுதிகளும் கிடைக்காததால் கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது என்று அறிவித்துள்ளனர்.

Leave a Response