ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு முழுமையாக முடிவைடந்திருக்கிறது.
மார்ச் 1 ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. பின்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மார்ச் 8 இல், ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
கொமதேகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும் முடிவடையாமல் இருந்த நிலையில், நேற்று அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை 11 கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இவ்வாறாக, கூட்டணிக் கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்களில் 13 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதிடாகியுள்ளது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 187 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுகிறது