இலண்டனில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்துப்பெண் – பழ.நெடுமாறன் ஆதரவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும் பிரித்தானிய அரசைக் கண்டித்தும், இத்தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், இலண்டனில் வாழும் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் கடந்த 10 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவருடைய இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அவரது உயிரைக் காப்பாற்ற முன்வரும்படி உலகத் தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானிய அரசு கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும், சிங்கள இனவாத அரசை ஐ.நா. நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் அவர்கள், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரான சீவரெத்தினம் அவர்களின் மகளாவார்.

ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக சீவரெத்தினம் அவர்கள் தொடக்கக் காலம் முதல் இலண்டனில் சர்வதேச மாநாடுகளையும், போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்தவர். அவருடைய மகள் திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்திருக்கிறார். அவரது போராட்டம் வெற்றிபெற உலகத் தமிழர்கள் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response