சீனாவிடம் சிக்கிக் கொண்டிருக்கும் இலங்கை – இந்தியாவுக்கு ஆபத்து

இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனாவைச் சேர்ந்த சினோசர் – இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது.

இது இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் சூரிய சக்தி மின் உற்பத்திகளுக்காக வடக்கிலுள்ள தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா? எனவும், அரசின் இந்தத் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “விலைமனுக் கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்துக்கு அந்தத் தீவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.

எவ்வாறாயினும் அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்தத் தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் என்றார்.

இதுதொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிபர் சந்திரிகா, இலங்கை சீனாவின் காலனித்துவமாக மாறிக் கொண்டிருப்பதாகவும், உயிரைக் கொடுத்து மீட்கப்பட்ட நாடு தற்போது சீனாவிடம் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், கிழக்கு முனைய விவகாரமும் இந்தியாவிற்கு கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ள நிலையில் வடக்கின் தீவுகள் சீனாவிற்கு கொடுப்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி இந்தியாவைச் சீண்டும் செயல் என்கின்றனர்.

இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

Leave a Response