ஏழு தமிழர் விடுதலை – ஆளுநர் கைவிரித்த பின் அடுத்து என்ன?

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறியபின்பு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்….

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் 28 மாதங்களாகக் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டு காலக்கெடு விதித்த பிறகுதான் இப்போது முடிவெடுத்திருக்கிறார்.

கடந்த சனவரி 25ஆம் தேதி எடுக்கப்பட்ட ஆளுநரின் முடிவு இன்றுதான் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலமாகவே தெரியவந்திருக்கிறது. ஆளுநர் மட்டுமே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தார் என்பதைவிட பாஜக தலைமையிலான மோடி அரசின் முடிவைத்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகிறது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை அவமதிப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்ட உறுப்புஎண்- 161, அவருக்கு அளித்துள்ள அதிகாரத்தை மறுத்ததன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதித்துள்ளார் என்றே கருத வேண்டி உள்ளது.

இது ஆளுநரின் – மோடி அரசின் தமிழர் விரோத மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுதமிழர் விடுதலை இவ்வளவு தூரம் தாமதமானதற்கு அதிமுக அரசே காரணம். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2014 ஆம் ஆண்டே அவர்களை விடுவித்திருக்க முடியும்.ஆனால் மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்து சவால் விட்டதன்மூலம் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல வழிவகுத்தது அவர்தான். அதன் பிறகுதான் இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் இழுத்தடிக்கப்பட்டது.
அன்று அவர் அதற்கான காரணத்தைக் குறிப்பிடும்போது 1991 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் குடியரசுத் தலைவர் நிராகரித்த ஒரு கருணை மனு மீது மீண்டும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பல தீர்ப்புகள் இதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 இல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரம் என்பது ஒரு ‘பிளினரி அதிகாரம்’ ; அது தனித்துவமான அதிகாரம் என்பதை நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவுபடுத்தி உள்ளன. அதை உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக் கட்டுப்படுத்த முடியாது. அது தெரிந்திருந்தும் கூட அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் காலதாமதம் ஏற்படுத்தும் உள்நோக்கோடு தான் மத்திய அரசுக்குக் கெடு விதித்து இதில் சிக்கலை ஏற்படுத்தினார்.

அதேபோல ஒரு இரட்டை அணுகுமுறையைத் தான் இன்றைய அதிமுக அரசும் இந்த விஷயத்தில் பின்பற்றி வருகிறது. ஏழு தமிழரையும் விடுதலை செய்து விட வேண்டும் என்று அதிமுக அரசு கூறுகிற அதே நேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பேரறிவாளன் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரோல் வழங்க மறுக்கிறது. இதிலிருந்து பாஜகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுக நாடகம் ஆடுகிறது என்பதை உணரமுடிகிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், உடனடியாக மீண்டும் சட்டப்பேரவையில் அல்லது அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை, அந்த ஏழு பேரையும் காலவரம்பற்ற ‘பரோலில்’ விடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response