பாசகவின் செயல்களால் இந்தியா சிதறும் – சிவசேனா எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

பா.ச.கவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்ட சிவசேனா, கருத்து முரணப்பாடு காரணமாக தேசியவாத காங்கிரசு, காங்கிரசு உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது.

ஆட்சி அமைத்ததிலிருந்து மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவிவருகிறது.

இந்தநிலையில், சிவசேனா அதிகாரப் பூர்வ இதழான சாம்னாவில் வெளிவந்துள்ள கட்டுரையில் மத்திய அரசு குறித்து கடுமையான விமர்சனம் இடம்பெற்றுள்ளது.

அதில், ‘பாசக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தார். அதில், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரசு ஆட்சியைக் கவிழ்க்க பிரதமர் மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார் என விஜய் வர்க்கியா தெரிவித்தார்.

என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்க சிறப்புக் கவனத்தை பிரதமர் எடுத்துக் கொண்டாரா? நாட்டுக்கு உரித்தானவர் பிரதமர். முதல்வரும், திரிணமூல் காங்கிரசுக் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

சனநாயகத்தில் அரசியல் தோல்வி என்பது சாதாரணமானது.ஆனால், மத்திய அரசு அந்தத் தோல்வியைத் தாங்காமல் மம்தா அரசை வெளியேற்ற முயல்வது வேதனையானது.

மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாகி, கவலையளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது.

இப்படியே சென்றால், சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதறுண்டுபோக நீண்டகாலம் ஆகாது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Response