கர்நாடக இசை அல்ல தமிழிசையே ஆதி இசை – சான்றுகளுடன் மருத்துவர் இராமதாசு கட்டுரை

கர்நாடக இசை எனப்படும் – தமிழைத் தவிர்க்கும் இசையே இந்தியாவின் மூத்த இசை என நம்பிக் கொண்டிருப்போருக்கு தெளிவான விளக்கத்தை அளிக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு “தமிழிசையே ஆதி இசை” என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை….

உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடி எனும் போது உலகின் மூத்த இசையும் தமிழிசையாகத் தானே இருக்க முடியும்? தமிழிசைப் பண்களைக் கேட்கும் போதே அது தான் உலகின் ஆதி இசையாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கர்நாடக இசை உட்பட உலகில் வேறு எந்த இசையின் ஆதரவாளர்களும் தங்களின் இசை தமிழிசையை விட மூத்த இசை என்று அறைகூவல் விடுத்ததில்லை. தமிழிசை காலங்களைக் கடந்தது என்பதை அனைத்து இசை வல்லுனர்களும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

தமிழ்க்குடி தான் உலகின் மூத்தக்குடி என்பதால், தொடக்கத்தில் தனித்துத் தான் வாழ்ந்து இருக்கிறார்கள்; அவர்கள் தனித்துத் தான் வாழ வேண்டியிருந்திருக்கிறது. மிக நீண்ட காலத்திற்குப் பிறகு தான் பிற இனங்கள் உருவாகியுள்ளன. அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பாகவே தமிழில் இசையும், அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின.

இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. முச்சங்க காலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதிலிருந்தே தமிழிசை குறைந்தது 3000 ஆண்டுகள் தொன்மையானது என்பதை அறியலாம்.

“முதல் இசை இலக்கண நூல் அகத்தியம்”

தமிழின் முதல் இலக்கண நூல் அகத்தியம் ஆகும். முதல் சங்கக் காலம், இடைச்சங்கக் காலம், கடைச்சங்க காலம் ஆகிய முச்சங்க காலத்திலும் இதுவே முதல் நூலாகும். வழக்கமாக இலக்கண நூல் என்றால் இயற்றமிழுக்கு இலக்கணம் எழுதப்பட்ட நூலாகத் தான் இருக்கும்.

ஆனால், அகத்திய முனிவரால் எழுதப்பட்ட அகத்தியத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் எழுதப்பட்டிருந்தது.

அகத்தியம் நூல் எழுதப்பட்டே சுமார் 3,000 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இசைக்கு இலக்கணம் வகுத்து ஒரு நூல் எழுதப்படுகிறது என்றால், அதற்கு பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகள் முன்பாகவே இசை உருவாகியிருக்க வேண்டும் என்பது இயற்கை. உலகில் வேறு எந்த மொழியிலும் 3000 ஆண்டுகளுக்கு முன் இசை உருவானதாக ஆதாரங்கள் இல்லை. அதன்படி பார்த்தால் தமிழிசை தான் உலகின் ஆதி இசை என்று நம்பமுடியும்.

அகத்தியம் எழுதப்பட்ட அதே காலத்தில் சிகண்டி முனிவர் என்பவர் ‘இசை நுணுக்கம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார். அது முழுக்க முழுக்க இசைத்தமிழுக்கான நூல் ஆகும். யாமளேந்திரர் என்பவர் ‘இந்திர காளியம்’ என்ற நூலையும், தேவவிருடி நாரதன் என்பவர் ‘பஞ்சபாரதீயம்’ என்ற நூலையும் எழுதினார்கள். இவை அனைத்தும் இசைக்கான இலக்கண நூல்கள் ஆகும். பெருங்குருகு அல்லது முதுகுருகு, பெருநாரை அல்லது முதுநாரை என்ற தலைப்பிலும் இசை இலக்கண நூல்கள் உள்ளன. இவையும் இசை இலக்கண நூல்கள் தான். இவற்றின் ஆசிரியர் பெயர்கள் தெரியவில்லை.

முத்தமிழ்ச் சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்க மற்றொன்று பஞ்சமரபு என்ற நூல் ஆகும். இந்த நூலை அறிவனார் என்பவர் எழுதினார். அகத்தியம் நூல் முத்தமிழுக்குமான இலக்கணம் கொண்ட நூல் என்றால், இது பழந்தமிழர் கால இசை மற்றும் நாடகத்திற்கான நூல் ஆகும்.இசை மரபு, வாக்கிய மரபு, நிருத்த மரபு, விநய மரபு, தாளமரபு என்னும் ஐந்து மரபுகள் பற்றிய இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

“தாளத்திற்கு தனி இசை இலக்கண நூல்”

‘தாளவகை யோத்து’ என்ற நூலும் முச்சங்க காலத்தில் எழுதப்பட்ட இன்னொரு நூல் ஆகும். இது இசைத்தமிழில் முழுக்க முழுக்க தாளத்திற்கான இலக்கணம் பற்றி எழுதப்பட்ட நூல் ஆகும். இசை, கூத்து ஆகிய இரண்டிற்கும் அவசியம் தேவைப்படுவது தாளம். இசையையும் கூத்தையும் ஓர் ஒழுங்கு அல்லது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது ‘தாளம்’ என்பது தான் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள மையக்கரு ஆகும்.

அகத்தியம் நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதன் ஒரு சில பகுதிகள் மட்டும் தான் கிடைத்துள்ளன. அகத்தியம் தவிர மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் முற்றாக அழிந்து விட்டன. அவற்றில் ஒரு நூல் கூட இப்போது இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இசைக்காகவும், இசையின் பல்வேறு பிரிவுகளுக்காகவும் இத்தனை நூல்கள் எழுதப்பட்டிருந்தால், அந்தக் காலத்தில் இசை தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்று தானே பொருள்.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழிசை அந்த அளவுக்கு வளர்ந்து இருந்தால் அது தானே ஆதி இசையாக இருந்திருக்க முடியும். தமிழிசையே ஆதி இசை என்பதற்கு இவற்றை விடவும் வேறு சான்றுகள் தேவையா?

“ராகங்களும், பண்களும்”

அரிகாம்போதி, நடன பைரவி, இருமத்திமத்தோடி, சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி ஆகியவை தான் தமிழிசையின் 7 பெரும் இராகங்கள் ஆகும். இந்த 7 ராகங்களுக்கும் ஏற்ற பண்கள் பாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக அரிகாம்போதி ராகத்திற்கு ஏற்ற பாலை செம்பாலை ஆகும். அதேபோல், நடன பைரவிக்கு படுமலைப்பாலை , இருமத்திமத்தோடிக்கு செவ்வழிப்பாலை, சங்கராபரணத்துக்கு அரும்பாலை, கரகரப்பிரியாவுக்கு கோடிப்பாலை, தோடி ராகத்துக்கு விளரிப்பாலை, கல்யாணிக்கு மேற்செம்பாலை ஆகியவை பழந்தமிழர் பண்கள் ஆகும். இந்த ராகங்களும், பண்களும் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்பது தான் குறிப்பிடத்தக்கது ஆகும். உலகில் வேறு எந்த மொழிகளிலும் இவ்வளவு முந்தைய காலத்தில் இசை தோன்றியதில்லை.

“தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும்”

சங்க காலத்திற்கு முந்தைய நூல்களில் அகத்தியத்துக்கு அடுத்த நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தில் உள்ள இசைக் கூறுகள் குறித்து முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளேன். சங்ககாலத்திற்கு முன்பே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் தனித்தனி பண்களும், இசைக்கருவிகளும் பயன்பாட்டில் இருந்தன என்பதை தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிக முறை இசை நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தது குறித்தும், அதற்காக பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் குறித்தும் தொல்காப்பியம் விரிவாக விளக்கியிருக்கிறது. தமிழிசையின் தொன்மைக்கு இவற்றை விட வேறேன்ன சான்று வேண்டும்?

சங்க காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தமிழிசையைத் தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லை. அதனால் திருவிழாக்களின் போது ஆண்கள், பெண்கள் ஒன்று கூடி, பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில், இன்னியம் உள்ளிட்ட இசைக்கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக சங்க காலத்திற்கு முன்பே பாணர் (பாடகர்), பாடினியர் (பாடகி), விறலியர் (நடன மங்கை) ஆகிய தொழிற்முறை இசை மற்றும் நடனக் கலைஞர்கள் இருந்ததையும் தொல்காப்பிய இலக்கியம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேபோல், சிலப்பதிகாரத்திலும் இசை குறித்த குறிப்புகள் இருந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கானல்வரியில் கோவலனும், மாதவியும் போட்டிபோட்டுக் கொண்டு யாழ் மீட்டியதைப் பதிவு செய்துள்ளேன். அதையும் கடந்து சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் இடம் பெறும் அரங்கேற்ற ஊர்வலத்தில் பண்டைத் தமிழரின் யாழ்களான முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை உள்ளிட்ட யாழ்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை இளங்கோவடிகள் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வகை யாழ்கள் இப்போது வழக்கத்தில் இல்லை. இந்த யாழ்களின் பயன்பாடு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது வழக்கமான தகவல் அல்ல… மாறாக, தமிழிசையே ஆதி இசை என்பதற்கு சான்று ஆகும்.

“கர்நாடக இசை – தமிழிசையின் தொடர்ச்சியே”

இசை குறித்த எந்த புரிதலும் இல்லாத சிலர் தமிழிசையை விட கர்நாடக இசை மிகவும் பழமையானது என்று கூறி வருகின்றனர். அவர்களிடம் வாதம் செய்வது தேவையற்றது; அவர்களை எண்ணிப் பரிதாபம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

14-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை கர்நாடக இசை என்று ஒன்று இல்லை. இப்போது பயன்பாட்டில் உள்ள கர்நாடக இசைக் கூட தமிழிசையின் அடிப்படைக் கூறுகளை அப்படியே எடுத்துக் கொண்டு, தமிழ் வரிகளுக்குப் பதிலாக பிற மொழிகளின் வரிகளை இட்டு நிரப்பிய வடிவம் தான்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் கர்நாடக இசையைத் திரைப்படங்களின் டப்பிங் பாடல்களுக்கு இணையானது என்று வர்ணிக்கலாம். கர்நாடக இசைக்கும் மூலம் தமிழிசையே.

தமிழிசைக்கு முந்தைய இசை ஒன்று இருந்தது என்று கடந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை நம்ப வைக்கப்பட்டு இருந்தது. இந்தியாவின் ஆதி இசை -முதலாவது இசைப்பாடல் தமிழிசையே என்பதை வரலாற்றுப் பின்னணியோடு, இலக்கியச் சான்றுகளுடன், இசைநுட்ப இயலின் அடிப்படையோடு நிலைநாட்டிய பெருமை தமிழ் இசைச்சங்கம் சார்பில் நடைபெற்ற பண்ணாராய்ச்சி மாநாடுகளையே சாரும்.

இசையியல் ஆய்விலும் , நுட்பங்களிலும் தலைசிறந்த விமர்சகர்களாக விளங்கிய இசைப்பேரறிஞர்கள் பலர்- அண்ணாமலை செட்டியார் அவர்கள் முன்நின்று நடத்திய பண்ணாராய்ச்சி மாநாடுகளில் பங்குகொண்டு “உலகின் ஆதி இசை தமிழிசையே’’ என்பதை தக்க சான்றுகளுடன் நிலை நாட்டினார்கள்.

சாம்பமூர்த்தியின் சான்று

அதிலும் குறிப்பாக, இசை ஆராய்ச்சியில் மகுடம் போல் விளங்கியவரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவருமான பி. சாம்பமூர்த்தி தமிழிசையின் தொன்மையைப் பற்றி அறுதியிட்டுக் கூறிய உண்மைகள் மறக்கக் கூடியவை அல்ல.

‘‘தற்காலத்தில் வழங்கும் பல ராகங்களுக்கு தேவாரப்பண்களே அடிப்படை என்று கூறலாம். இந்திய சங்கீதத்தில் தேவாரப்பண்களே மிக மிகப் பழமையான உருப்படி ஆகும்’’ என்று கூறியதுடன் அவர் நிற்கவில்லை. ‘‘உலகத்தில் இசை வடிவங்களுடனேயே முதன் முதலில் தோன்றியவை தேவாரப்பாடல்களே.

அதனாலேயே தேவாரப்பதிகங்களுக்கு தனிச்சுவையும், பிரகாசமும் இருந்து வருகின்றன’’ என்று குறிப்பிட்டார்?.
ஆக, உலக மொழிகளிலேயே, முதன்முதலாக மலருடன் மணமும், உடலுடன் உயிரும் சேர்ந்து பிறப்பது போல பண்ணுடன் சேர்ந்து பிறந்தபாடல் என்ற பெருமை உடையவை தேவார திருவாசகப் பாடல்களே! இதைப்போலவே ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களும் தமிழிசையின் மற்றுமொரு பரிணாமமே. அந்த வகையில் பழம்பெரும் தமிழிசை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானது.

ஆகவே, பெருமிதத்துடன் முழக்கமிடுவோம் தமிழிசையே ஆதி இசை!

Leave a Response