எடப்பாடி ஓபிஎஸ்ஸை தாண்டி கே.பி.முனுசாமிக்கு வரவேற்பு – பாசக அதிர்ச்சி

சென்னை இராயப்பேட்டையில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது….

கடந்த 50 ஆண்டுகளாக நம்மை வழி நடத்திச் சென்ற தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லை. இவர்களை எதிர்த்து நின்று அரசியல் செய்த கருணாநிதியும் இன்று இல்லை. இந்தத் தலைவர்கள் இல்லாததால் எப்படியாவது இடையில் புகுந்து வெற்றி பெற்று விடலாம் என்று பலர் கணக்குப் போட்டு வருகிறார்கள். திராவிட இயக்கத்தின் கடந்த 50 ஆண்டு கால ஆட்சிகளில் தமிழகத்தில் எந்த தேசியக் கட்சிகளையும் உள்ளே நுழையவிடாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

தற்போது, திராவிட இயக்க ஆட்சியில் இந்த நாட்டைச் சீரழித்து விட்டார்கள் என்று சில தேசியக் கட்சிகள் சொல்கிறார்கள். சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும். இந்தத் தலைவர்களை ஒழிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தைச் சீரழித்து விட்டதாகச் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேசியக் கட்சிகளுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் தமிழக அரசு, மத்திய அரசிடம் விருதுகளைப் பெற்றிருக்கிறது. அப்படி சிறப்பான ஆட்சியாக இருந்தது.

கூட்டணியில் எந்த தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகள் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் கூட்டணிக்கு வரும் போது சிந்தித்துக் கொள்ள வேண்டும். இது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை. அவர்கள் வழியில் வந்த எங்களுடைய கொள்கையும், அதிமுக தொண்டர்களின் கொள்கையும் இது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய ஆட்சி அதிகாரம் கையிலிருப்பதால் அதிமுகவை அடிமை போல் நடத்திக் கொண்டிருக்கிறது பாசக. அதிமுகவும் தமிழக ஆட்சியில் தொடரவேண்டும் என்பதற்காக அடிபணிந்து வந்தது.ஆட்சி முடியப் போகிற இந்நேரத்தில் பாசகவை எச்சரிக்கும் விதமாக கே.பி.முனுசாமி பேசினார்.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைவிட கே.பி.முனுசாமிக்கு அதிமுக தொண்டர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு அவரைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்கிற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனால் பாசக அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response