என் அறிக்கை பொய் அதிலுள்ள செய்திகள் உண்மை – ரஜினி ஒப்புதல்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகத் தகவல் வெளியான நிலையில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியில்…..

2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரகம் தீவிரமாகப் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ‘கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால் இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து ரஜினிகாந்த் தந்து ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது….

என் அறிக்கை போல் ஒரு கடிதம் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தப்பதிவின் மூலம், அறிக்கை பொய்யென்றாலும் அதிலுள்ள விசயங்கள் உண்மை என்று ரஜினி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவை உண்மை என்றால் அவருடைய அரசியல் கட்சி தொடக்கமும் இல்லை என்றாகும் வாய்ப்பே அதிகம்.

Leave a Response