எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் – பழ.நெடுமாறன் கோரிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அநீதி இழைக்கிறார் என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம், கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஆனால், ஒரு மாதக் காலத்திற்கும் மேலாகியும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது “அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மாணவர்கள்” என்பதைச் சுட்டிக்காட்டி நீதிபதி கிருபாகரன் கண்கலங்கியிருப்பது தமிழக ஆளுநர் மீது விழுந்த சாட்டையடியாகும்.

தமிழக ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்வது இது முதன்முறையல்ல, 27 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும், ஆளுநர் கடந்த ஓராண்டுக் காலத்திற்கும் மேலாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள். இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response