
தேனியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகரச் செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. வுக்கும் ஒரு சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம் இருந்தது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 15 இலட்சம் பேர் தி.மு.க.வில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தை கடனில் தத்தளிக்கும் மாநிலமாக ஆக்கியது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை. மக்கள் பணியாற்றவே நான் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் எந்தத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டாலும் அவரைத் தோற்கடிப்போம்.
குறிப்பாக போடி தொகுதி மக்களுக்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் அந்தத்தொகுதியைக் கைப்பற்ற முடியாது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்கியே தீர வேண்டும். அப்போது தான் தமிழும், தமிழகமும் தலை நிமிரும். ஊழலற்ற ஆட்சி நடைபெறும் என்றார்.
கூட்டத்தைத் தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது…..
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பணம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்காகவே ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி எம்.பி. யுமான ரவீந்திரநாத் மொரீசியஸ் நாட்டுக்குச் சென்று இருக்கிறார்.
இவ்வாறு ஒரு திடுக்கிடும் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.


