ஒபிஎஸ் மகன் மீதான தீர்ப்பு நிறுத்தி வைப்பு

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.இரவீந்திரநாத் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று ஓ.பி.இரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ஓ.பி.இரவீந்திரநாத் ஆவார்.

அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டிருந்தனர்.

இந்தத் தேர்தலில் ஓ.பி.இரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி அந்தத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதிகார துஷ்பிரயோகம், வங்கிகளில் பெற்ற 10 கோடி ரூபாய் கடனை மறைத்து பொய்யான தேர்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை இரவீந்திரநாத் மறைத்துவிட்டார்.தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் மிலானி தாக்கல் செய்திருந்தார். ஓ.பி.இரவீந்திரநாத் மீதான பணப்பட்டுவாடா புகாரை தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பு நடைபெற்று வந்தது. வழக்கில் தங்க தமிழ்ச்செல்வன் ஆஜராகி தன்னுடைய விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்தார். ஏற்கனவே 3 நாட்கள் நேரில் ஆஜரான இரவீந்திரநாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.இரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தாங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும். எனவே வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று இரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response