130 நிமிடங்களில் 15 நிமிடங்கள் – நம்பிக்கையில்லாத் தீர்மான விவாத விவரம்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதானவிவாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கியது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது மக்களவை காங்கிரசுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிற்பகல் 2.48 மணிக்கு பேசத் தொடங்கினார். மக்களவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பிரதமர் அவையில் இருப்பது மரபு. இதன்படி பிரதமர் மோடி அவைக்கு வந்தார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் அவைக்குத் திரும்பினர்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார்.

சுமார் 130 நிமிடங்கள் உரையாற்றிய அவர், 90 நிமிடங்கள் வரையிலும் மணிப்பூர் பற்றி எதையும் பேசவில்லை.

பிரதமர் மோடி பேசியதாவது…..

விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதை எல்லாம் நான் பார்த்தேன். என்ன மாதிரியான விவாதத்தை நீங்கள் செய்தீர்கள். உங்கள் விவாதத்தைப் பார்த்து உங்களின் மேலிடங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. இங்கு பீல்டிங் செய்தது எதிர்க்கட்சிகள். ஆனால் சிக்சர்களும், பவுண்டரிகளும் அடித்தது என்னவோ ஆளும் தரப்பு. எதிர்க்கட்சிகள் வீசியது எல்லாமே நோ-பால். அடுத்த முறையாவது நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு வர வேண்டும். இதே போல 2018 இல் கூட எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது கூட நான் கூறியிருந்தேன், இந்தத் தீர்மானம் அரசுக்கு எதிரானது அல்ல, எதிர்க்கட்சியின் கூட்டணியினரை சோதிக்கக் கொண்டு வரப்பட்டது என்றேன். அரசு மீது நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறின. அது மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் சென்ற போது, எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்று மக்கள் கூறி விட்டனர். 2019 தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதே போல, 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு மகத்தான வெற்றிதர மக்கள் முடிவு செய்து விட்டனர்.

மழைக்கால கூட்டத் தொடரின் முக்கியமான எந்த மசோதா மீதும் விவாதம் நடத்த விடாமல் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் செய்துள்ளன. நாட்டை விட கட்சிதான் பெரிது என அவர்கள் காட்டி உள்ளனர். நாடு உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். மோடிக்குக் கல்லறை தோண்டப்படும் என்பது அவர்களுக்கு பிடித்தமான முழக்கம். என்னைப் பொறுத்த வரை அவர்களின் துஷ்பிரயோகம், நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகள் டானிக் போன்றவை. அவர்கள் யாரை எதிர்த்தாலும் அவர்கள் நன்கு செழித்து வளர்வார்கள். அதற்கு நானே சாட்சி.

எதிர்க்கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயர் விவாதம் செய்யும் பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனாலும், அமித்ஷா பெருந்தன்மையுடன் அவருக்குப் பேச வாய்ப்பளித்தார். காங்கிரசுக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. ஒருவேளை மேற்கு வங்கத்தில் இருந்து ஏதேனும் அழைப்பு வந்திருக்கலாம். எங்களின் ஒரே தீர்மானம், இலக்கு எல்லாமே தேசத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். இளைஞர்களுக்கு நாங்கள் ஊழல் இல்லாத அரசைத் தந்துள்ளோம். அவர்கள் இறக்கை கட்டி வானில் பறக்கும் வாய்ப்பை அளித்துள்ளோம். நாட்டின் பெருமையை மீட்டுள்ளோம். புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.

உலக அரங்கில் எங்கள் இமேஜை கெடுக்க சிலர் முயற்சித்தனர். ஆனால் உலகம் உண்மையை அறியும். அதைத் தவறாக வழிநடத்த முடியாது. எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி தவறான செய்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பின. நீங்கள் 2028 ஆம் ஆண்டிலும் இதே போன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவீர்கள். அப்போது இந்தியா உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். காங்கிரசும் அவர்கள் நண்பர்களும், இந்தியாவை விட அதிகமாக பாகிஸ்தானைதான் நம்புவார்கள். பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை அனுப்பி எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும், அவர்கள் மீது அக்கறை கொண்டிருப்பார்கள். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினோம். ஆனால் அதை நம்பாத அவர்கள், பாகிஸ்தான் கூறியதை நம்பினர்.

பெங்களூருவில் நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இறுதிச் சடங்கு நடத்தியதற்காக எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போது, பழைய காரை எலக்ட்ரிக் வாகனமாக்கி புதிய பெயிண்ட் அடித்து புதுப் பெயர் சூட்டி வெற்றிக்கு முயற்சிக்கிறீர்கள். இந்தியா என கூட்டணிக்கு பெயர் சூட்டி நம்பிக்கையைப் பெற முயற்சிக்கிறீர்கள். காங்கிரசைப் பொறுத்த வரையில் அதன் கட்சி சின்னம், பெயர் முதற்கொண்டு எதுவுமே அதற்குச் சொந்தமில்லை. எல்லாமே மற்றவர்களிடம் இருந்து கடனாகப் பெற்றதுதான். மூவர்ணக் கொடி போலவே கட்சிக் கொடியை வைத்துக் கொண்டனர். மகாத்மா காந்தியின் பெயரைத் திருடிக் கொண்டனர். எனவே இது இந்தியா கூட்டணி அல்ல, தலைக்கனம் மிக்க கூட்டணி. அதில் உள்ள எல்லாருமே கூட்டணிக்குத் தலைவராக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் தோல்வி அடைந்த தயாரிப்பையே அறிமுகப்படுத்தி உள்ளனர். அது எப்போதுமே தோல்வியை மட்டுமே காணும். காங்கிரசு, ஊழல் கடையையே நடத்தி உள்ளது. அதில், நாட்டைப் பிரித்தது, எமர்ஜென்சி, அராஜக மற்றும் திருப்திபடுத்தும் அரசியலையே விற்றுள்ளது. எனவே அவர்களின் புதிய கடை விரைவில் மூடப்படும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது, பலமுறையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் பற்றி பேச நினைவுபடுத்தி ‘மணிப்பூர், மணிப்பூர் என தொடர்ந்து முழக்கமிட்டனர். ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றிப் பேசவில்லை என்பதால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதைப் பார்த்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு மணிப்பூர் பற்றி பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது….

மணிப்பூர் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். ஆனால் அதைப்பற்றிக் கேட்கப் பொறுமையில்லாமல் வெளியேறிவிட்டனர். கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தில் விவாதிக்கத் தயார் என நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று (நேற்று முன்தினம்) மணிப்பூர் தொடர்பான கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளைப் பொறுத்த வரையில் இந்த விசயத்தில் அரசியல் செய்வது மட்டுமே நோக்கம்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்கள் நடந்துள்ளன. குற்றவாளிகளைத் தண்டிக்க ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. எந்த ஒரு குற்றவாளியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என உறுதி அளிக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் பக்கம் துணை நிற்கிறது. இந்த அவையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும், நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து சரியான தீர்வு காண்போம் என மணிப்பூர் மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

இங்குள்ள சிலர் பாரத மாதாவின் மரணத்திற்கு ஆசைப்படுகின்றனர். அவர்களால் எப்படி இது முடிகிறது. பாரத மாதாவை அவமதிப்பதே காங்கிரசின் வரலாறு. வடகிழக்கு மாநில மக்களின் நம்பிக்கையை அவர்கள் கொலை செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களைக் காயப்படுத்தினர். வடகிழக்கு மாநில பிரச்னையின் ஆணிவேரே காங்கிரசும் அதன் அரசியலும்தான். அதன் பாதிப்புதான் மணிப்பூர் இனக்கலவரம். பாஜக அரசு வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறது. மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வலியைத் தருகின்றன. அதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மக்களவையில் மாலை 5.10 மணிக்கு உரையை துவக்கிய அவர் 2.10 மணி நேரம் பேசினார். இதில் பெரும்பாலான நேரம் காங்கிரசு மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். மணிப்பூர் குறித்து சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

மோடியின் உரையில், அமித்ஷா பெருந்தன்மையுடன் பேசவைத்தார் என்று சொன்ன மக்களவை காங்கிரசுத் தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரியை இடைநீக்கம் செய்தனர்.

Leave a Response