முத்தையா முரளிதரன் அறிக்கைக்கு சுடச்சுட ஒரு எதிர்வினை

தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இன்றுவரை அரசியல் செய்து வரும் முத்தையா முரளிதரனின் மூன்று பக்க விளக்க அறிக்கைக்கு எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை…

ஒரு மனிதாபிமான அரசியல் வேண்டுகோள் இப்போது பிரச்சாரப் போராக மாறிவிட்டது. முரளீதரன் முத்தய்யா நிதானமாகவும், சென்டிமென்டலாகவும், தனிநபர் துயர் சார்ந்தும் ஒரு தன்விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்றது இனக்கொலை அல்ல என விவாதிப்போர் உண்டு. முரளீதரனின் வாதம் அதற்குள் நிற்பது. ஈழப் போராட்டம் என்பதன் தோற்றக் காரணம் முதல் அதன் அழிவு(அழிப்பு)வரை விடுதலைப் புலிகளே முதன்மைக் காரணம் என விவாதிப்போரும் உண்டு. முரளீதரனின் வாதம் அதற்குள் நிற்பது. போர், மரணங்கள், அழிவுகள், துயர்கள் அத்தனைக்கும் ஜேவிபி-புலிகள் காரணம் என வரலாறெழுதும் வாதம் ஒன்று உண்டு. முரளீதரன் அதற்குள் நிற்பவர்.

ஜேவிபி-புலிகளின் அரசியல் தந்திரோபாயங்கள் தொடர்பாக ஒருவர் இன்று விமர்சனம் மேற்கொள்ளலாம். இது இன்னும் மேலான சிங்கள-தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான அக்கறையைக் கொண்டிருக்கும். இலங்கைத் தீவின் இந்த அரைநூற்றாண்டு காலப் போருக்கு, அழிவுக்கு, துயருக்கு ஆதாரக் காரணம், ஆதித் தீமை ஜேவிபி, புலிகள் அல்லது வேறு இயக்கங்கள் எவையும் அல்ல. அவை இலங்கையைத் தொடர்ந்து ஆண்ட இனவாத-முதலாளிய நோக்குக் கொண்ட அரசுகள்.

இந்த அடிப்படை முரணில் முரளீதரன் எங்கு நிற்கிறார்? அவர் மௌனத்தைத் தேர்ந்து கொள்ளலாம். பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் போலத் தமது திறன் பற்றி மட்டுமே கவனம் குவிக்கலாம். முரளீதரன் இந்தப் பாதையைத் தேர்வு செய்யவில்லை. அவர் எல்லாத் தருணங்களிலும் அரசின் பிரச்சாரகராக இருந்து கருத்துதிர்த்தார். இலங்கைக் கிரிக்கட் தொடர்பான எதிர்ப்பு, காணமால் போனோர் குறித்த பிரச்சினை, முள்ளிவாய்க்கால் பேரழிவு போன்ற அனைத்திலும் அவர் இலங்கை அரசின் மொழியில், இலங்கை அரசுக்காகப் பேசினார்.

2009 நிலைமைக்குப் பிற்பாடு, இன்று வரையிலும் அவர் ராஜபக்சே சகோதரர்களின் குடும்ப நண்பர். தனிப்பட்ட விருந்துகளின் அழைப்பாளர். மகிந்த சகோதரர்கள் இன்று எதேச்சாதிகார, சிஙகளப் பெரும்பான்மை இனவாத, முடியாட்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்கிறார்கள். இதில் ஒரு தொழில்முறையாளராக முரளீதரன் ஒரு நிலைபாடு எடுக்காமல் இருக்கலாம். எடுத்தால் மக்கள் சார்பாக இல்லாது போனால், வன்முறையை, அதிகாரத்தை ஏவுபுவர் பக்கம் நின்று அவர்களை ஆதரித்துப் பேசினால் அவர் அறவுணர்வு கொண்டவர் அல்ல. ஜனாபதி தேர்தலின்போது கூட கோத்தபாய ராஜபக்சேவை ஆதரித்துப் பேசியவர் முரளீதரன். குஜராத் படுகொலையாளர்களுக்கு விஜய் சேதுபதி லாலி பாடுவது போன்றது இது.

தமிழக ஜனநாயகவாதிகளின் வேண்டுகோள்களையும் மீறி இப்படம் உருவாகுமானால் நாயகன் விஜய் சேதுபதி படத்தில் இரு காட்சிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கோதபய விருந்தில் முரளி கலந்துகொண்ட காட்சி ஒன்று. இரண்டாவது காணாமல் போன தமது உறவுகள் தொடர்பாக டேவிட் கமரூன் முன்பு ஈழத் தாய்மார்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை முரளி நக்கலடித்த காட்சி.

அறுதியாக, இலங்கை அரசு ஈழத் தமிழர், மலையகத் தமிழர் என இரு பகுதி மக்களையும் விரோதிகளாவே நடத்தியது. விளைவே இரு பகுதி தமிழ் மக்களும் எதிர்கொண்ட துயர். அந்தத் துயரின் துளி முரளியின் தந்தையின் மீதும் கவிந்திருக்கவே செய்யும். பிரச்சினையென்னவென்றால், தனிமனிதத் துயரைக் காட்டிலும் பெரும்துயர்களை, அழிவுகளை, உயிரழிவுகளை இலங்கை அரசுகளின் கொள்கைகள் கொண்டிருந்தன. அந்த நெருக்கடியான தருணங்களில் எல்லாம் முரளி இலங்கை அரசின் பிரச்சாரகராக இருந்தார் என்பதுதான் இங்கு தார்மீகப் பிரச்சினை.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response