ரஜினி மற்றும் தமிழருவி மணியன் பற்றி நல்ல மொழிநடையில் சுபவீ விமர்சனம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழருவிமணியன் குறித்தும் ரஜினிகாந்த் மற்றும் பாஜக குறித்தும் விமர்சித்து எழுதியுள்ள பதிவில்….

நடிகர் ரஜினிகாந்த், தன் கல்யாண மண்டபத்திற்குக் கடந்த ஆறு மாதங்களாக வருமானம் இல்லாததால், சொத்து வரியைக் குறைக்க வேண்டும் (?!?) என்று நீதிமன்றத்திற்குச் சென்ற கதை எல்லோரும் அறிந்ததே! அவருக்கே அதில் உள்ள பிழை பிடிபட்டு, மாநகராட்சிக்குச் செல்லாமல் நீதிமன்றம் வந்தது தவறுதான் என்று புரிந்து, ‘அனுபவமே பாடம்’ என்று ஒரு ‘பன்ச் டயலாக்’கும் சொல்லி முடித்துவிட்டார்.

ஆனால் அவருடைய நண்பர் தமிழருவி மணியன் அவரை விடுவதாயில்லை. அவருக்கு மீண்டும் ஒரு சிக்கலைக் கொண்டுவந்துள்ளார்.

இன்று (அக்டோபர் 16) காலை, காந்திய மக்கள் இயக்கம் கடிதத்தாளில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை, “ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால், அதைப் பற்றி அடுத்த கணமே, அழுக்கு வார்த்தைகளால், அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து, தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்திடும் ஒரு கூட்டம், சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் இருப்பது மிகுந்த கவலை தருகிறது” என்று தொடங்குகிறது.

அழுக்கு வார்த்தைகளால், அருவருப்பான நடையில் விமர்சனம் செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் கட்சிகள் எவை என்றும் தெரியவில்லை. இப்போது நாம் நல்ல சொற்களால், நல்ல மொழி நடையில், எந்தக் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் சில விமர்சனங்களை முன்வைக்கலாம்.

முதலில், வரி வாங்கும் அரசின் ‘சிஸ்டம்’ எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.கடந்த ஆறு மாதங்களாகத் திருமண மண்டபத்திற்கு வருமானம் இல்லை என்கிறார் ரஜினி. உண்மைதான், வருமானம் இருந்திருக்காது. அப்படியானால், அதற்குரிய வருமான வரியும் தானாகக் குறைந்திருக்கும். குறையவில்லை என்றால் கேட்கலாம்!

ஆனால் அதற்காகச் சொத்து வரி எப்படிக் குறையும்? சொத்து வரி என்பது, அந்தந்தப் பகுதியின் மனை விலை மதிப்பு, கட்டுமானம் ஆகியனவற்றைப் பொறுத்ததுதானே! அதற்கும், வருமானம் குறைந்ததற்கும் என்ன தொடர்பு? சொத்து இருந்தால் வரிப்போடத்தான் செய்வார்கள். அந்த வரியை வைத்துத்தான், அந்தப் பகுதியின் சாலை ஒழுங்குகள், குடி நீர் வசதி, மின் வசதி ஆகியன அந்தந்த உள்ளாட்சி அமைப்பினால் செய்யப்படும். இந்தச் சின்னச் செய்திகள் எல்லாம் நாளை நாட்டுக்கே நல்ல ஆட்சி தர விரும்புகின்ற ஒருவருக்கு எப்படித் தெரியாமல் இருக்கிறது?

போகட்டும், ரஜினி கொடுத்துள்ள அந்தச் சொத்துக் கணக்கு விவரம் சரியானதா? சமூக வலைத்தளங்களில் அந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. சொத்து வரி அறிவிக்கையின்படி, அதன் (ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின்)கட்டுமான அளவு (built up area ) 250 சதுர அடியாம். அதாவது ஏறத்தாழ 15க்குப் 17 அடி என்று வைத்துக் கொள்ளலாம். ராகவேந்திரா திருமண மண்டபத்தைப் பார்க்கும் ஒரு சிறு குழந்தை கூட இந்தக் கணக்கை ஏற்காதே! உடனே ‘சிஸ்டம் கெட்டுத்தான் போய்விட்டது’ என்பது புரிந்து விடுமே!

சரி, நாளைக்கே அரசியலுக்கு வரப்போகிறார், நவம்பர் மாதம் மதுரையில் மாநாடு என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர்கள், உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சலுகைகள் கேட்பதை விட்டுவிட்டு, மக்களுக்காகக் குரல் கொடுங்கள் என்று சொல்ல வேண்டாமா? ஆறு மாதங்களாக யாருக்கும் வருமானம் இல்லை, எனவே நாட்டு மக்கள் எல்லோருக்கும் வரியைக் குறையுங்கள் என்று அறிக்கை விட்டிருந்தால், அவருடைய சமூக அக்கறையினை நாம் புரிந்து கொள்ளலாம். மக்களைப் பற்றி எந்தக் கவலையும்படாத ஒருவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? அவர் அரசியலுக்கு வரவில்லை. தேர்தலுக்கு மட்டும்தான் வர விரும்புகின்றார்.
இரண்டு திராவிடக் கட்சிகளையும் அவர் வந்தால்தான் ஒழிக்க முடியும் என்கிறார் தமிழருவி மணியன்.

மத்திய அரசு பற்றி ஒரு சொல்லும் அவர் அறிக்கையில் காணப்படவில்லை. இன்று இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு சார்ந்திருக்கிறது! உடனே கொரானா காரணம் என்பார்கள். ஆனால் நம் அருகில் உள்ள, சிறிய நாடான பங்களாதேஷ் கூட, உள்நாட்டு உற்பத்தியில் நம்மை முந்தி விட்டதாக IMF அறிக்கை கூறுகிறதே. அவர்களுக்கும் கொரோனா இருக்கத்தானே செய்கிறது.

இன்றைய (16.1020) தினமணியில் (ஆம், அவாள் ஏட்டிலேயே) ஒரு புள்ளிவிவரம் வந்துள்ளது. 2018-19 ஆம் நிதியாண்டில் மட்டும், பல்வேறு பெருநிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ரூ. 876.10 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நண்கொடையாக வாரிவழங்கியுள்ளனவாம். அந்த மொத்தத் தொகையில், ரூ 698.02 கோடியை, 1573 பெரு நிறுவங்களிடமிருந்து, மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மட்டுமே பெற்றுள்ளதாம்.
எண்ணிப்பாருங்கள்….இந்த மத்திய அரசு யாருடைய அரசாக இருக்க முடியும்?

அதனால்தான், பெரு நிறுவனங்களுக்கு 4.1 இலட்சம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கிறது. வங்கிகளில் கடன் வாங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு, இந்த ஊரடங்குக் காலத்தில், வட்டியும், வட்டிக்கு வட்டியும் போடுகிறது. இவ்வளவு கொடுமையான மத்திய அரசு குறித்தும், ஆளும் பாஜக கட்சி குறித்தும் தமிழருவி மணியனுக்கு எந்தக் கவலையும் இல்லை. திராவிடக் கட்சிகளை அழிக்க ரஜினிகாந்தைக் கூட்டி வருகிறாராம்.

பேசாமல், ரஜினியைச் சர்வாதிகாரி ஆக்கி விடுவேன் என்று கூறுங்கள். அவரும் மகிழ்ந்து, தன் திருமண மண்டபத்திற்குச் சொத்து வரி, வருமான வரி, சேவை வரி எல்லாவற்றையும் நீக்கி விடுவார்!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response