எங்கள் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குத் தகுதி கிடையாது என்று சிங்கள அமைச்சரின் பேச்சு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….
“இந்திய தலைமையமைச்சர் மோடி, எங்களின் தலைமையமைச்சர் இராசபக்சேயிடம் கூறியபடி,
13ஆவது சட்டத் திருத்தத்தை ஒருபோதும் நிறைவேற்றமாட்டோம். ஏனெனில் இது எங்கள் நாட்டின் உள் விவகாரமாகும்” என இலங்கை அமைச்சர் வீரசேகர அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், அவர் பேசுகையில், “இலங்கை-இந்திய உடன்பாடும், 13ஆவது சட்டத் திருத்தமும், எங்கள் மீது இந்தியாவினால் திணிக்கப்பட்டவையாகும். அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். வல்லமைப் படைத்த
இந்தியப் படையால் தோற்கடிக்க முடியாத விடுதலைப்புலிகளை எங்களின் இராணுவம் தோற்கடித்து வெற்றிப் பெற்றது. எங்களின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிட இந்தியாவுக்கு எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது. வட-கிழக்கு மாநிலத்தை உருவாக்க அனுமதித்தால் எதிர்காலத்தில் அதோடு இணைந்து #தமிழ்நாடும் பிரிந்து போய்விடும்” என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இலங்கைப் போரில் இந்தியாவின் பேருதவியால்தான் நாங்கள் வெற்றிப் பெற்றோம்” எனப் போர் முடிந்ததும் இலங்கை அதிபராக இருந்த இராசபக்சே பகிரங்கமாகக் கூறி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இப்போது இந்தியாவுக்கு எதிராகத் தனது அமைச்சரைவிட்டு இராசபக்சே பேச வைக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் பேசுவதற்கான பின்னணி வெளியாகியுள்ளது.
சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் குழுவின் வெளியுறவுத் துறைக்கான பொறுப்பாளராக உள்ள யாங் என்பவர் இலங்கைக்கு வந்து 16,500 கோடி டாலர் பெறுமான உதவியை அளிக்கவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக சீனா நடந்துகொள்ளும் என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டினைக் காப்பதற்கு சீனா உதவும் என்றும், பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது #என்பதே அமைச்சரின் பேச்சுக்குப் பின்னணியாகும்.
இராணுவ உதவி, பொருளாதார உதவி ஆகியவற்றை இப்போதும் அளித்துவரும்
இந்திய அரசு, நச்சுப் பாம்புக்குப் பால் வார்க்கும் கொள்கையைக் கைவிடவேண்டும். இல்லையேல் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்த இலங்கை ஒருபோதும் தவறாது என்பதைத்தான்
சிங்கள அமைச்சரின் பேச்சு எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.