கே.பி.இராமலிங்கம்.கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தீவிரமாக இயங்கியதால் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமானவர். 26 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானவர்.
எம்.ஜி.ஆர் மறைவின்போது இராணுவ வண்டியிலிருந்து ஜெயலலிதாவைக் கீழே இறக்கிவிட்டதால் உலக அளவில் பெரும் அறிமுகம் கிடைத்தது.
அதன்பின், திமுகவில் இணைந்த அவர் விவசாய அணிச்செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.ஏப்ரல் 2020 இல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது,இயற்கை வளப் பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
புதியகல்விக் கொள்கை உள்ளிட்ட பாஜக அரசின் சில திட்டங்களை ஆதரித்ததால் அவர் பாஜகவில் சேரப்போகிறார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்ததால் அதிமுகவில் சேரப் போகிறார் என்றும் பலவிதமான பேச்சுகள் இருக்கின்றன.
இந்நிலையில், நம் தமிழ்வலை (tamizhvalai.com) இணைய இதழுக்காகப் பேட்டி என்று அணுகியதும் எதுவானாலும் கேளுங்கள் என்று முன் வந்தார். கோபப்படுவார் என்று நினைத்துக் கேட்ட கேள்விகளையும் இயல்பாக எதிர்கொண்டார்.
அவருடைய பேட்டி……
கேள்வி: உங்கள் இளமைப்பருவம் மற்றும் அரசியல் நுழைவு குறித்து சுருக்கமாகச் சொல்லுங்கள்?
டாக்டர் கே பி இராமலிங்கம் பதில்: –
சென்னை கால்நடைமருத்துவக்கல்லுரியில் நான் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோது எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘படம் ரிலீஸானது அப்போது முதல்வராக இருந்த கலைஞர் முதன்முதலாக சினிமா போஸ்டருக்கு வரி போட்டார்,அதனால் எம்ஜிஆர் அந்தப் படத்தை போஸ்டர் இல்லாமலே ரிலீஸ் செய்தார், இரண்டாவது வாரத்தில் சென்னை முழுவதும் நாங்கள் மாணவர்கள் போஸ்டர் ஒட்டினோம் அப்போது சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஆர் டி சீதாபதி அவர்கள் தலைமையில் எங்கள் மீது தாக்குகல் நடத்தப்பட்டு என் மார்பு பகுதியில் கத்திக்குத்துப் பட்டு சென்னை மத்திய பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அதிகாலையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிகிச்சைக்கான வார்டில் எம்ஜிஆர் வந்து எனக்கு ஆறுதல் சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை அவரை என் இதயதெய்வமாகத்தான் வணங்கி வருகிறேன்.
அன்று என் மார்பில் போடப்பட்ட தையலின் வடுவும் மறையவில்லை நானும் இன்றுவரை எம்ஜிஆரையும் மறக்கவில்லை.
எம்ஜிஆர் என்னை சென்னை மாவட்ட அதிமுக மாணவர் அமைப்பாளராக நியமித்து என்னை அரசியலில் அறிமுகப்படுத்தி 26 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராக்கிவிட்டார்.இதுதான் என் அரசியல் நுழைவு.
கேள்வி: 1980 ஆம் ஆண்டே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.84 இல் அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?
பதில்:
ஏற்கனவே எங்கள் சேலம் மாவட்டத்தில்(அப்போது பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த மாவட்டம்) அண்ணன் பொன்னய்யன் அமைச்சராக 1977 முதல் மிக சிறப்பாகப் பணியாற்றிவந்தார்,மேலும் எங்கள் மாவட்டத்தில் பெரியாரின் தொண்டன்,அண்ணாவின் தோழர் க.இராசாராம் 1980 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தலைவரானார், ஆகவே இளையவனான நான் அமைச்சராக்கப்படவில்லை.
மேலும் நான் அருந்ததியருக்கு பிரநிதித்துவம் வேண்டும் என்று நாமக்கல் அருணாசலத்தையும்,திமுக வின் வீரபாண்டியாருக்கு எதிராகப் பணியாற்ற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விஜயலட்சுமியையும் அமைச்சராக்க வேண்டும் என்று எம்ஜிஆரிடம் என் விருப்பத்தை என்னுடைய இரஷ்ய பயணத்தின் போது தொலைபேசியில் அவர் பேசும் போது கூறினேன்.அப்போது என்னுடன் என் ஆருயிர்த் தோழர் அன்றைய உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகத்ரட்சகன் இரஷ்யாவில் உடன்இருந்தார்.
எம்ஜிஆரிடம் எல்லா உரிமைகளும் நாங்கள் பெற்றிருந்ததால் எனக்கும் சரி,நண்பர் ஜெகத்ரட்சகனுக்கோ,நண்பர் ஏ.சி.சண்முகத்திற்கோ,தோழர் சைதை துரைசாமிக்கோ எம்ஜிஆர் வாழ்கிற காலம்வரை அமைச்சராகும் எண்ணமே வரவில்லை என்பதுதான் உண்மை. மற்றவர்களுக்காகத்தான் நாங்கள் பேசியிருக்கின்றோம்.
கேள்வி: கேள்வி: நல்ல பேச்சாளர் ஊக்கம் மிகுந்த செயற்பாட்டாளர், மக்களிடம் பெரிய அறிமுகம் ஆகிய பல நேர்மறை சக்திகள் கொண்ட நீங்கள் அதற்கேற்ப உயரம் தொடவில்லையே?
பதில்:
உயரம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்.அமைச்சர் பதவியை மட்டுமா? நான் நான்கு முறை இராசீபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன்.தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவராக இளம்வயதிலேயே பணியாற்றி மாவட்டநிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை, ஆகிய இரண்டு ஆளுமை மிக்க துறைகளுக்கு மாவட்டம் தோறும் ஆய்வு நடத்தி பல்வேறு சீரமைப்புகளுக்கு பரிந்துரைத்தேன். எனது பரிந்துரைகளை அப்படியே எம்ஜிஆர் பட்ஜெட்டில் அறிவித்தார்.
திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் மூண்று முறை போட்டியிட்டு ஒருமுறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டேன்.
தலைவர் கலைஞர் அவர்களால் ஆண்டுக்கு ரூ 700 கோடி நிதிசெலவீனம் கொண்ட விவசாய நலவாரியத்திற்கு அமைச்சர் தகுதியில் முழு அதிகாரம் பெற்ற தலைவராக நான் நியமிக்கப்பட்டு பல்வேறு புதிய நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கமுடிந்தது.அதுதான் இப்போது உழவர்பாதுகாப்புத் திட்டம் என்று ஜெயலலிதாவால் பெயர்மாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது.
மேலும் மாநிலங்களவையில் ஆறாண்டுகாலம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன்.என் பணிகளில் நான் பெருமிதம் கோண்டுள்ளேன்.இன்னும் கடந்துவந்த என் பாதையின் பெருமிதத்தைப்பற்றி விரிவாக வேறு ஒரு சமயத்தில் குறிப்பிடுகிறேன்
கேள்வி; மு.க.ஸ்டாலின் தலைவரான பின்பும் மு.க.அழகிரி ஆதரவாளராக இருந்தீர்கள் என்று சொல்லப்படுவது குறித்து?
பதில்:
அப்படியல்ல, எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் தலைவர் கலைஞர் என்னை அரவணைத்து விவசாய அணிச் செயலாளராக 28 ஆண்டுகள் சுதந்தரமாகப் பணியாற்ற அனுமதித்தார்.நான் கலைஞர் குடும்பத்தினர் அனைவர் மீதும் மாசற்ற அன்பு கொண்டவன்.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்து ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது ஒரே நாளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தா மோஅன்பரசு தலைமையில் 16 கண்டனக் கூட்டத்தில் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பேசியதால் என்மீது ஜெயலலிதா 11 வழக்குகளைப் போட்டார்.ஆனால் ஸ்டாலின் செய்நன்றி மறப்பார்.கலைஞரின் குடும்பத்தில் மற்றவர்கள் யாரும் அப்படியல்ல அவ்வளவுதான்.அதனால்தான் அண்னன் அழகிரி உட்பட என்பால் அன்புகொண்டவர்கள் மீது நானும் பணிவுடன் நடந்து கொள்கிறேன்.
கேள்வி: மாவட்ட அரசியலில் தீவிரம் காட்டாததுதான் உங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறதே?
பதில் :
தலைமைக்கழகச் செயலாளர்களில் ஒருவராக இருந்துகொண்டு மாவட்ட அரசியலில் தலையிடுவது தேவையற்றது என்ற கலைஞரின் அறிவுரை எனக்கும் ஏற்புடையதாக இருந்ததால் திமுக வில் 30 ஆண்டுகளாக மாவட்ட அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்புது உண்மைதான்.அதனால் எனக்குப் பின்னடைவு என்று கருதவில்லை அதுதான் எனக்கு இப்பவும் பிடிக்கிறது.
கேள்வி: திமுக வலிமையாக இருக்கும் சூழலில் அங்கிருந்து வெளியேறியது பலவீனம் என்று கூறப்படுவது பற்றி?
பதில்:
பலவீனம் என்று சொல்லமுடியாது.1990 ஆம் ஆண்டு நான் திமுக வில் சேரும்போது நாடாளுமன்றத்தேர்தலில் திமுக நாடு முழுவதும் தோற்ற நிலையில் ஜெயலலிதா செல்வாக்குப் பெற்ற நிலையில் வளருகிறார் என்பதை நான் புரிந்து தான் இருந்தேன். அதைப்போலத்தான் இன்றும்.
கேள்வி : அண்ணா சிலைக்கு மரியாதை செய்துவிட்டு புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது கொள்கை முரணாக உள்ளதே?
பதில் :
இதில் கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை.இந்தியப் பேரரசு கொண்டு வந்துள்ள புதியகல்விக்கொள்கை மாநிலமக்களின் நலனுக்கு எதிரானது அல்ல புதியகல்விக் கொள்கை பற்றி 2.9.2020 நாளிட்ட தினமணி நாளிதழில் ‘விழிப்புடன் இருப்போம்’ என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை மிக விளக்கமாக வந்திருக்கிறது. அதற்கு இதுவரை எந்த திமுக தலைவர்களும் பதிலுரைக்க முன்வரவில்லை என்பதே என்னிடம் கொள்கை முரண்பாடு இல்லை என்பது நிரூபணமாகிறது.
கேள்வி: முன்பு ஜெயலலிதா எதிர்ப்பு, இப்போதைய மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு- இவை இரண்டுமே வெகுமக்கள் மனநிலைக்கு எதிரானது என்று சொல்லப்படுகிறதே?
பதில்:
வெகுமக்களின் மனநிலைக்கேற்ற வகையில் நாமும் நடந்துகொள்ளலாம் என்று தந்தை பெரியாரும்,அண்ணாவும் எண்ணியிருந்தால் திராவிட இயக்கம் தோன்றியே இருந்திருக்காது. வெகுமக்களின் மனநிலை தவறாக இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது எப்படி பகுத்தறிவாகும். நாம் ஆதாயம் பெறுவதற்காக, நமது அனுபவத்தையும் உழைப்பையும் தவறான தலைமையை நாட்டுக்கு அடையாளம் காட்ட எனக்கு விருப்பம் இல்லை,அதைத் தடுக்க முற்படுவதுதான் ஒரு நேர்மையாளனின் பண்பாக இருக்கவேண்டும்.அதுதான் இரண்டு காலகட்டத்திலும் நான் எடுத்த முடிவு.
கேள்வி : தமிழக முதல்வருடனான சந்திப்பு சாதி ரீதியானது என்கிறார்களே?
பதில்:
இல்லை. இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விவசாயசங்கங்களின் பிரதிநிதியாக ஜுன் 12 ஆம் தேதி முதல்வரை சேலத்தில் சந்தித்தேன். அன்றுதான் அவர் காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறந்தார்.அன்று டெல்டா பகுதில் தூர்வாறும் பணிகள் எங்கெங்கு முற்றுப்பெறாமல் இருக்கிற புள்ளிவிவரங்களை நான் அவரிடம் விளக்கினேன்.அதை வாய்க்கால்களில் தண்ணீர் போய்ச் சேர்வதற்குள் ஒழுங்குபடுத்துவதாக அவர் கூறினார்.
எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அரசியலில் வெவ்வேறு பாதைகளில் பயணித்த நாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று சந்திக்கும் வாய்ப்பு பொதுதளத்தில் கிடைத்ததால் ஒரு மணிநேரம்,எங்கள் இருவரின் குடும்பநலன், இருவரின் அரசியல் பயணம், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் ஆகியவை குறித்துப் பேசினோம்.இடையில் ஏற்பட்ட பிரிவுகளை மறந்து எம்ஜிஆரின் தொண்டர்கள் என்ற ஆரம்ப நிலையில் எங்களது சந்திப்பு இருந்தது.
எங்கள் சந்திப்பிற்கு எம்ஜிஆர் சாயம் பூசலாம்,சாதிச் சாயம் பூசப்படுவதை நான் விரும்பவில்லை.
கேள்வி : அடுத்து அதிமுகவா? பாஜகவா?
பதில் :
அதற்கு நான் அவசரப்படவில்லை. தற்போது இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருந்து அந்த அமைப்பை நடத்திவருகிறேன்.அதில் ஓய்வுபேற்ற நீதிபதிகள்,நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றிய உயர்அதிகாரிகள்,பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள்,பத்திரிகைத் துறையைச்சார்ந்த சான்றோர்கள்,விவசாய சங்கத்தலைவர்கள் இந்த அமைப்பின் ஆலோசகர்களாக உள்ளனர்.அந்த அமைப்பிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் என் அரசியல் பயணத்தைத் தொடர திட்டமிட்டுள்ளேன்.விரைவில் காலம் வழிகாட்டும்.
– அ,தமிழன்பன்