ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக – அதிரடி சாதனை செய்த ராஜஸ்தான் அணி

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்து திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 9 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின.

ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜோஸ் பட்லர், அங்கித் ராஜ்புத் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் மாற்றம் இல்லை. அதனால் இந்த முறையும் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிட்டவில்லை.

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் முதலில் பஞ்சாப்பை பேட் செய்யப் பணித்தார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணித்தலைவர் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர்.

பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் இருவரும் சரவெடியாய் வெடித்தனர். ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரு ஓவரில் ராகுல் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்ட, திவேதியாவின் ஓவரில் அகர்வால் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி தொடர்ச்சியாக விளாசினார். ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலையும் அகர்வால் விட்டுவைக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. இவர்களைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். அட்டகாசப்படுத்திய மயங்க் அகர்வால் பந்தை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் (16.3 ஓவர்) திரட்டிய நிலையில் பிரிந்தது. மயங்க் அகர்வால் 106 ரன்களில் (50 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார். ராகுல் 69 ரன்களில் (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

கடைசிக் கட்டத்தில் மேக்ஸ்வெல்லும், நிகோலஸ் பூரனும் இணைந்து ஸ்கோரை 220 ரன்களை கடக்க வைத்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. பூரன் 25 ரன்களுடனும் (8 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), மேக்ஸ்வெல் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 224 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் (4 ரன்) ஏமாற்றினார். இதன் பிறகு அணித்தலைவர் ஸ்டீவன் சுமித்தும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து ரன்மழை பொழிந்தனர். அணியின் ஸ்கோர் 100 ரன்களாக (9 ஓவர்) உயர்ந்த போது ஸ்டீவன் சுமித் (50 ரன், 27 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

அடுத்து வந்த ராகுல் திவேதியா ஆரம்பத்தில் தடுமாறினார். மறுமுனையில் சாம்சன் பட்டையைக் கிளப்பினார். மேக்ஸ்வெலின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை தெறிக்க விட்டார். ஆனால் சாம்சன் (85 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) முக்கியமான கட்டத்தில் கேட்ச் ஆனார். இதனால் பஞ்சாப்பின் கை ஓங்குவது போல் தெரிந்தது.

இந்தச் சூழலில் விசுவரூம் எடுத்த ராகுல் திவேதியா, காட்ரெலின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை நொறுக்கினார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் நகர்ந்தது. திவேதியா 53 ரன்களில் (31 பந்து, 7 சிக்சர்) விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் ஜோப்ரா ஆர்ச்சரின் (13 ரன்) இரு சிக்சர் வெற்றியை உறுதிப்படுத்தியது.

ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைச் சுவைத்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். இதற்கு முன்பு இதே ராஜஸ்தான் அணி 2008 ஆம் ஆண்டு டெக்கான் அணிக்கு எதிராக 215 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

நடப்புத் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு இது 2 ஆவது வெற்றியாகும்.

Leave a Response