“திருடன், அயோக்கியன், ஏமாற்றுபவன் மற்றும் பொறுக்கிகளை இழிவாகப் பார்ப்பதில்லை. ஆனால் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பார்க்கும் மனநிலை எந்த வகையில் சரி” என்று கேட்கிறார், வி.சி.க. தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், “புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்: ஒரு சகாப்தம்” என்ற தலைப்பில் புதிய தொடர் வியாழக்கிழமையிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இத் தொடருக்கான ஒரு முன்னோட்ட அல்லது கவனஈர்ப்பு ஏற்பாடாக கரு. பழனியப்பன் நெறியாள்கையில் (அவர் நடத்தி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (செப்டெம்பர் 27) நண்பகல் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில்தான் திருமாவளவன் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். மனசாட்சியுள்ள தமிழர்கள், இந்தியர்கள் “அது சரியில்லை” என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி மற்றும் சில பரிச்சயமான முகங்கள், பல புதிய முகங்கள் என உரையாடலில் பங்கேற்றவர்களின் கலவை வழமையிலிருந்து விலகியிருந்தது.
அதுபோலவே, இதுவரை பரவலாக அம்பத்கர் பற்றி அறியப்படாத முக்கியத் தகவல்களையும் கருத்தாளர்கள் பகிர்ந்துகொண்டனர். ஒரு மணி நேரம் கவனத்துடன் அனைவரின் கருத்துகளையும் கேட்டபிறகு, இறுதியில் திருமாவளவன் பேசினார்.
“டாக்டர் அம்பேத்கரை கொண்டாடும் தமிழா தமிழா” என்று நிகழ்ச்சியை அறிவித்திருந்தார்கள். “அம்பேத்கரை கொண்டாடுவது முக்கியமல்ல; அவரைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம்” என்று எடுத்த எடுப்பிலேயே கருத்தாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தைத் தூக்கி நிறுத்தினார்.
தொடர்ந்து தனது உரைவீச்சில், புரட்சியாளர் அம்பேத்கரின் இன்றைய தேவை, வரலாற்றுரீதியாக இந்தியச் சமூகம் கடந்து வந்த தடம், நாடு போற்றிய பிற தலைவர்களிலிருந்து எந்த வகையில் அம்பேத்கர் தனித்தன்மையும் போராட்டக் கூர்மையும் கொண்டவர், அம்பேத்கரை புரட்சியாளர் என்றழைப்பதற்கான அடிப்படை என கவனத்துக்குரிய முக்கியப் புள்ளிகளை தொட்டும் துளைத்தும் பழைய கேள்விகளை விரட்டியடித்து பல புதிய கேள்விகளை முன்வைத்தும், முடித்தார்.
திருமாவளவன் நன்றாகப் பேசுவார் என்பது புதிய செய்தியல்ல. எல்லோரும் அறிந்ததே. எங்கும் எப்போதும் தெளிவாகவும் அழுத்தமாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடியவர். ஊடகங்களின் சிக்கலான அல்லது புரிதலற்ற கேள்விகளுக்கும் நிதானமிழக்காமல் பதிலளிக்கக்கூடியவர். இன்றைய நிலவரப்படி, தனது கொள்கை சார்ந்த தெளிந்த நோக்கும் அதை எக்கணத்திலும் தேர்ந்த மொழியில் வெகுமக்களுக்கு கடத்தும் ஆற்றலும் நிறைந்த அரசியல் ஆளுமையாகத் திகழ்கிறார், திருமாவளவன்.
இதனால், பிற தலைவர்களை குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வேண்டாம். அவரவர் திறன் சார்ந்து வெளிப்படுகிறார்கள். வேறு தளங்களில் அவர்கள் தனித்தன்மையை நிலைநாட்டுகிறார்கள். அதற்காகத் திருமாவளவனை அவருக்கான இடத்திலிருந்து விலகி மதிப்பிட வேண்டியதில்லை.
“தமிழ் கேள்வி” செந்தில் கோட்-சூட்டுடன் இந்த நிகழ்ச்சியில் கருத்தாளராகப் பங்கேற்றார். “ஒரு முறை எனது நிகழ்ச்சியில் டாக்டர் திருமாவளவன் என்று சொன்னதற்காக பல எதிர்ப்புக்குரல்கள் ஒலித்தன” என்று சொன்னார். எந்தத் தொலைக்காட்சியில் என்று தெரியவில்லை.
திருமாவளவன் முனைவர் பட்டம் பெற்று நாளாகிவிட்டது. அதற்கான உரத்த பாராட்டுகள் அரசியல் களத்தில் ஒலித்ததாகத் தெரியவில்லை. அரசியல் களம் கௌரவ டாக்டர் பட்டத்துக்கு நெருக்கமானது. இது புதிதாகத் தெரிந்திருக்கலாம்.
நமக்கான செய்தி என்னவெனில், திருமாவளவனை டாக்டர் திருமாவளவன் என்று ஏற்பதில் உள்ள பொதுமனச் சிக்கல். அவர் படித்து, ஆய்வு செய்து, முறைப்படி முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகும் அவரை டாக்டர் என்று சொன்னதற்கே எதிர்க்குரல் என்றால், நமது சமூகத்தின் உள் அலைவரிசை எவ்வாறு குலைந்து போயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பலரும் கவனித்திருக்கலாம். திருமாவளவன் என்றால் சில நெறியாளர்கள் வழக்கத்துக்கு மாறாக நெருக்கடி கூட்டிய கேள்விகளை வீசுவார்கள். நிகழ்ச்சியின் இறுதியில், திருமாவளவன் பதில்களில் அவர்கள் சிதறிக் கிடப்பதையும் பார்த்திருக்கிறோம். எனினும், அவர்களின் முற்றுகை விழைவு எந்த அடிப்படையில் வருகிறது…. சிந்தனைக்குரியது.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக அம்பேத்கரின் கொள்கைகளை, களத் தடைகள் கடந்து முன்னெடுத்துச் செல்ல முனைப்புடன் செயலாற்றி வரும் திருமாவளவனை, முற்றிலும் அவரது தகுதி சார்ந்து ஏற்பதிலேயே நமது சமூகத்துக்கு எத்தனைத் தயக்கம்…? இத்தனைக்கும், தேசியத்தில் திளைத்தவர்கள், திராவிடத்தில் ஊறியவர்கள் நாம்.
இந்தப் பின்புலத்தில்தான், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய தொடர் தனிக் கவனம் பெறுகிறது. அந்தத் தொடர், தரத்திலும் தொழில்நுட்பரீதியாகவும் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. என்றாலும், அப்படியான ஒரு தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டிய அவசியத்தை காலம் உருவாக்கியிருக்கிறது. அதற்கான முன்னோட்ட உரையை டாக்டர் தொல். திருமாவளவன் நிகழ்த்தியிருப்பதும் காலத்தின் கட்டாயமே.
மையம் விரியும் காலம்.
-இளையபெருமாள் சுகதேவ்