இராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி

இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்த நேரத்தில் இந்திய அரசிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் திலீபன். பனிரெண்டு நாட்கள் சொட்டுநீரும் அருந்தாமல் போராடி உயிர்துறந்தார்.

செப்டெம்பர் 26 ஆம் தேதி தியாக தீபம் திலீபன் நினைவுநாள்.ஆண்டுதோறும் அந்நாளை தமிழீழ மக்கள் நினைவு கூர்ந்து கண்ணீர்விட்டு வருகிறார்கள். இவ்வாண்டு திலீபன் நினைவேந்தலுக்கு சிங்கள அரசு தடைவிதித்திருக்கிறது.

ஆனாலும் தடையை மீறி திலீபன் நினைவு கூரல் நடந்திருக்கிறது.

சாவகச்சேரி சிவன் ஆலய வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை அடையாள உண்ணாநோன்பு இருந்து திலீபன் நினைவைப் போற்றியிருக்கிறார்கள்.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய வளாகத்தில் நடந்தது.

இதன்மூலம், ஆயுத முனைத் தடைகளை உடைக்க முடியுமென மீண்டுமொரு முறை தமிழ்த் தேசம் நிரூபித்துள்ளது.

தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமையை வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

சிங்கள அரசு வழக்கம் போல இராணுவம்,காவல்துறை மற்றும் நிர்வாக இயந்திரங்களை ஏவி நினைவேந்தல் நிகழ்வுகளையும், அதற்கான உரிமை கோரிக்கையையும் தடுக்க முனைந்தது. எனினும், தடைகளை மீறி தமிழ் மக்கள் வலுவாக தமது நிலைப்பாட்டை ஒற்றுமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல் சிங்கள இரானுவத்தின் நேரடி மிரட்டல்களையும் தடைகளையும் தாண்டி யாழ்.பல்கலை மாணவர்களும் மாவீரர் தூபி முன்னதாக மண்டியிட்டு திலீபனிற்கு அஞ்சலி செலுத்தினர்.

மாதவம் செய்த நம் பிள்ளைகளே நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே எனும் முழக்கத்துடன் தடை தாண்டி அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பிரிந்து நின்ற அரசியல்தலைவர்கள் ஒருங்கிணைந்து திலீபன் நினைவேந்தலில் கலந்து கொண்டனர் என்பதால் சிங்கள அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

Leave a Response