
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பாஜக அணியுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பாஜக செய்தித் தொடர்பாளர் பதவியை நயினார் நாகேந்திரன் பறித்துள்ளார்.
தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பாஜக பல வழிகளிலும் நெருக்கடி கொடுத்து வருகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக,பாஜகவின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளரான ஏ.என்.எஸ்.பிரசாத்,நேற்று ஒரு அறிக்கை கொடுத்தார்.
அதில், தவெக, பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும். கூட்டணிக்கு வந்தால் தகுதியான இடங்கள் வழங்கப்படும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கூட்டணியில் சேர மிரட்டல் விடுப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த அறிக்கை கூடுதல் கவனம் பெற்றது. விஜய்யை பாஜக மிரட்டுவது உண்மைதான் என்பதற்கு இதுவே சான்று என்று பலர் பேசத் தொடங்கினார்கள்.
இந்தநிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழ்நாடு பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இப்போது முதல் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சட்டமன்றத் தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட, ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையும் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


