விராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி

துபாயில் நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளின் 7 ஆவது லீக் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து 97 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பந்து வீசுவதற்கு பெங்களூரு அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக பெங்களூரு அணித்தலைவர் விராட் கோலிக்கு ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மோசமான தோல்வியால் நொந்துபோயுள்ள விராட் கோலிக்கு இந்த அபராதம் கூடுதலாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் ராகுலின் இரு கேட்ச்சுகளை விராட் கோலி நழுவவிட்டார்.17 ஆவது ஓவரில் ஒரு கேட்ச்சையும், 18 ஆவது ஓவரில் ஒரு கேட்ச்சையும் கோலி நழுவவிட்டார்.

அப்போது கே.எல்.ராகுல் சதத்தை நிறைவு செய்யவில்லை. கோலி கேட்ச்சைவிட்டதால் கடைசி 4 ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணியினர் 74 ரன்கள் சேர்த்தனர்.

இதனால் விராட்கோலியைப் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.

Leave a Response