தமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு, குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் அரசியல்கட்சித்த்லைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்.பி.பி.யின் மூச்சுக்காற்று உடலை விட்டு பிரிந்தாலும் – அவர் மூச்சுவிடாமல் பாடிய பாடல்கள் காற்றில் உயிர் வாழும்! என்று தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ் வணக்கம் செலுத்தியுள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் கவிபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்….

தமிழ்த்திரையுலகில் ஐம்பதாண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாடிவந்த “பாடும் நிலா” பாலு மறைந்துவிட்டார் என்ற செய்தி நமக்கு இதயமே நொறுங்கி விட்டதுபோல் ஆகிவிட்டது.

தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் – இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர், ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள்! என இசைத்துறையில் வரலாறு படைத்தவர் எஸ்.பி.பி அவர்கள்!

எஸ்.பிபி. அவர்கள் பல்வேறு மொழிகளில் பாடியிருந்தாலும் தமிழ்மொழியில் அவர் பாடிய பாடல்கள் தனிச்சிறப்புமிக்கவை; அழகுணர்ச்சி பெற்றவை! தமிழ்ச்சொற்களை சரியாக உச்சரிக்கும் பாங்கு, தனது குரலின் வழியாக வெளிப்படுத்தும் இசை இலாவக உணர்ச்சி! கவிஞர்களின் வரிகளுக்கு மேலும் உயிரூட்டும் உத்தி ஆகியன எஸ்.பி.பியின் தனிச்சிறப்பாகும்!

அவரது தனிப்பாடல்களில், குறிப்பாக தமிழீழம் விடுதலை குறித்த பாடல்கள் நூற்றுக் கணக்கானவை!, அது போராட்ட விடுதலை உணர்ச்சியை தட்டியெழுப்பும்! தமிழ் ஈழ விடுதலை ஆதரவு நிலையில் எஸ்.பிபி இறுதிவரை உறுதியாக இருந்தார்! அவரது மறைவு இசைத்துறைக்கு மட்டுமின்றி தமிழுக்கும் தமிழர்க்கும் பேரிழப்பாகும்!

2020 ஆம் ஆண்டு ஒரு சோக ஆண்டாகவே மாறிவிட்டது. கொரோனா எனும் கொடுந்தொற்று நம்மிடையே வாழ்ந்த எத்தனையோ ஆளுமைகளை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அதில் பாடகர் எஸ்.பிபியும் ஒருவராகி விட்டார் எனும்போது நம்மால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

எஸ்.பி.பி.யின் உடல் இம்மண்ணில் புதைந்து போயினும், அவரது இன்னிசைக் குரல் காற்றில் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரின் மூச்சுக்காற்றுக்கு உடலிலிருந்து பிரிந்தாலும் அவர் மூச்சுவிடாமல் பாடிய பாடல்கள் நம்மோடு மூச்சுவிட்டு கொண்டிருக்கும்! இசைக்கு தொண்டு செய்து கலைஞன் நமக்கு விசையாகவும் திசையாகவும் இருப்பான்! எஸ்.எஸ்.பி.பிக்கு மரணமில்லை! காற்றில் தவழும் பாட்டாக நம்மோடு வாழ்கிறார்! காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response