அறநெறியுடன் வாழ தமிழ் கற்கவேண்டும்- ஜோ.மல்லூரி பேச்சு

அயல்மொழி மயக்கத்தில் இருந்து தெளிந்து, தமிழை கற்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று திரைப்பட நடிகரும், கவிஞருமான ஜோ.மல்லூரி தெரிவித்தார்.

 ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி, 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாலை நேர சிந்தனை அரங்கில் “நடந்தாய் வாழி தமிழே’ என்னும் தலைப்பில் அவர் பேசியதாவது:

 உலகிலேயே மிக மூத்த கலாசாரம் லெமூரியா கலாசாரம். அங்கிருந்த பக்குளி நதி கரையில் தான் தமிழ் நாகரீகம் தோன்றியது. அது தான் திராவிட நாகரீகமாக, சிந்துசமவெளி நாகரீகமாக, சுமேரிய நாகரீகமாக, அரேபிய நாகரீகமாக, எகிப்து நாகரீகமாக, கிரேக்க நாகரீகமாக, ரோமானிய நாகரீகமாக வளர்ச்சி பெற்று ஐரோப்பிய நாகரீகமாக இப்போது உருவெடுத்துள்ளது.

 முதலில் வேட்டை சமூகமாக இருந்த மக்கள், பின்னர் வேளாண் சமூகமாக, அறிவாளி சமூகமாக, தொழில் சமூகமாக மாறி இப்போது அறிவியல் சமூகமாக மாறி இருக்கிறோம். நாகரீகம் என்பது புறத்தோற்ற வளர்ச்சியின் குறியீடு. பண்பாடு என்பது அகத்தோற்ற வளர்ச்சியின் குறியீடு.

 சமூகத்தை இணைக்கும் கருவி தான் மொழி. இப்போது இருக்கும் சமூகத்தை தமிழ் இணைக்கிறதா என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் பாரதி. தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என்று அவர் முழங்கினார். ஒரு மொழி சிதைந்தால் ஓர் இனம் சிதைந்துவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.

 கடந்த 25 ஆண்டுகளில் இலக்கியம் தொடர்பாக வளர்ச்சி பெற்றுள்ள மொழிகள் தமிழ், சீனம் மட்டும் தான். இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களை உருவாக்கப் போட்டி போடுகின்றனர். ஆனால், மனிதர்களை உருவாக்க போட்டி போடுவதில்லை.

 அறிஞர்கள், ஞானிகளை உருவாக்குவது தான் உண்மையான கல்வி. சமுதாயத்தை உருவாக்கும் போராளிகள் தான் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

 இன்றைய இளைஞர்கள் தாய்மொழியை கற்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அயல் மொழி மயக்கத்தில் இருந்து தெளிந்து, தாய்மொழியைத் தயக்கமின்றி கற்க வேண்டும். வணிக நோக்கத்துக்காக பிறமொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால், அறநெறியில் வாழ தமிழை கற்க வேண்டும்.

 எத்தனை மொழிகள் அழிந்தாலும், தமிழ் இன்றும் இளமையுடன் வீறுநடைபோட்டு வருகிறது. தமிழ் மொழி அல்ல, வாழுவதற்கான அறம். அதனால், தான் இன்றும் வாழ்கிறது. படைப்பும், படிப்பும் இணையாக பயணித்தால் தமிழின் வளர்ச்சி உச்சிக்கு சென்றுவிடும் என்றார்.

Leave a Response