நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கிய அவருடைய பயணம் இரண்டு நாட்களுக்கு முன்பு,அகமதாபாத் நகரை அடைந்த நிலையில், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் யஷ்வந்த் சின்கா உரையாற்றியுள்ளார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது….
மத்திய பாஜக அரசானது, பொருளாதார அடிப்படையில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால், அந்தப் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல், அனைத்தும் சரியாக உள்ளது என்று தவறான புள்ளிவிவரங்களைக் காட்டி வருகிறது. ஆனால், எப்போதுமே தவறான புள்ளிவிவரங்களைக் காட்டிக் கொண்டிருக்க முடியாது.
மத்திய அரசு தன்னிடம் உள்ள அனைத்து நிதியாதாரங்களையும் இஷ்டப்படி செலவு செய்துள்ளது. இதனால், அரசு தற்போது திவாலாகும் விளிம்பு நிலைக்கு வந்துள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு செலவு செய்ய வேண்டும் என்று பலரும்கூறிவரும் நிலையில், மோடி அரசோ செலவைக் குறைப்பது பற்றி பேசி வருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், தனியார் முதலீடுகள் வெகுவாகக் குறைந்து, தற்போது பூஜ்ஜியம் என்னும் நிலைக்கு வந்துள்ளது.
இந்த பொருளாதார மந்தநிலை அனைத்துத் துறைகளிலும் உள்ளது. உதாரணமாகப் போக்குவரத்துத் துறையில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதுசிறிது சிறிதாக அதிகரித்து, உற்பத்தித்துறை முழுவதுமாக முடங்கியுள்ளது. ஆகவே, வரவிருக்கும் பட்ஜெட் மிகவும் கடுமையாக இருக்கும்.
கடந்த முறைகளில் இல்லாத அளவிற்கு, பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை பிரதமர் மோடியே முன்னின்று நடத்தியுள்ளார். முன்பு இத்தகைய கூட்டங்களை நிதியமைச்சர்கள்தான் நடத்துவார்கள். காரணம் அந்த அளவிற்குப் பொருளாதார மந்த நிலை வாட்டி வதைப்பதே ஆகும்.
ஆனால், அவற்றை மறைப்பதற்காகக் குடியுரிமைத்திருத்தச் சட்டம் போன்றவற்றை பாஜக பயன்படுத்துகிறது. அத்துடன், குடியுரிமைப் பதிவேட்டையும் நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக உள்துறைஅமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இவை இரண்டுமே மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் திட்டங்கள் ஆகும்.
இவ்வாறு யஷ்வந்த் சின்கா பேசியுள்ளார்.