முஷாரஃப்புக்கு மரணதண்டனை – அச்சத்தில் ராஜபக்சே குடும்பம்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (வயது 76).இவர் முதலில் பாகிஸ்தான் இராணுவ தளபதியாக இருந்தார். அங்கு நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி அந்த நாட்டின் அதிபராகப் பதவி ஏற்றார்.

அவர் அதிபர் பதவி வகித்தபோது 2007 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அரசியல் சாசனத்தை முடக்கி விட்டு, நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். அங்கு அந்த ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 15 ஆம் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.

2008 ஆம் ஆண்டு முஷரப்பின் பதவியைப் பறிக்க அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வரும் சூழல் உருவானது.

அதைத் தொடர்ந்து அவர் பதவி பறிப்பு தீர்மானத்தை சந்திப்பதற்கு முன்பாகவே, அந்த ஆண்டில், ஆகஸ்டு 18-ந் தேதி பதவி விலகினார். அதன்பின்னர் அவர் இலண்டனுக்குச் சென்று விட்டார். அவர் 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

அந்த ஆண்டு அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் வென்று, அந்த நாட்டின் பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, தனது ஆட்சியை இராணுவப் புரட்சி செய்து கவிழ்த்த முஷரப், அரசியல் சாசனத்தை முடக்கி, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு போட்டார்.

இந்த வழக்கில் முஷரப் மீது 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி தேசத் துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி துபாய் சென்றார். அதன்பின்னர் அவர் நாடு திரும்பவே இல்லை.

தற்போது அவர் ‘அமிலாய்டோசிஸ்’ என்ற அபூர்வ நோய் தாக்கி, துபாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களில் ‘அமிலாய்ட்’ எனப்படும் அசாதாரண புரோட்டீன் உருவாவதால் ஏற்படுகிற நோய் இது.

முஷரப் நேரில் ஆஜர் ஆகாமலேயே அவர் மீதான தேசத் துரோக வழக்கு, இஸ்லாமாபாத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பெஷாவர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வாக்கர் அகமது சேத், சிந்து உயர்நீதிமன்ற நீதிபதி நாசர் அக்பர், லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி சாகித் கரீம் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியாளர் ஒருவர், அரசியல் சாசனத்தை முடக்கி வைத்ததற்காக வழக்கை எதிர்கொண்டது இதுவே முதல் முறை.

துபாய் ஆஸ்பத்திரியில் இருந்தவாறு ஒரு வீடியோ செய்தி வெளியிட்ட முஷரப், தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறினார்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 19-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த மாதம் 28-ந் தேதி வழங்கவிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் (27-ந் தேதி) முஷரப் வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல்கள் குழுவை கடந்த 5-ந் தேதிக்குள் புதிதாகப் போட வேண்டும் என்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அரசு தரப்பில் புதிய வக்கீல்கள் குழு நியமிக்கப்பட்டு, அந்தக்குழு 5-ந் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானது.

அதைத் தொடர்ந்து முஷரப் வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி நேற்று தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், இந்த தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சவுக்கத் அஜீஸ், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீத் தோகர், முன்னாள் சட்ட மந்திரி ஜாகித் ஹமீத் ஆகியோரை சந்தேக குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அப்போது அரசு தரப்பில், “முஷரப்புக்கு உதவியவர்களையும், துணை நின்றவர்களையும் சந்தேக நபர்களை குறிப்பிட விரும்புகிறோம். அனைவர் மீதான விசாரணையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியம்” என்று கூறப்பட்டது.

ஆனால் நீதிபதி சாகித் கரீம், “3½ ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு வேண்டுகோளை அரசு வைப்பது சரியான நோக்கத்தில் அல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.

முஷரப் தரப்பில் ஆஜரான வக்கீல் ராசா பஷீர், “முஷரப்பின் வாக்குமூலம் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 342-ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். தன் தரப்பு கருத்தை எடுத்து வைக்கும் வாய்ப்பு முஷரப்புக்கு தரப்பட வேண்டும். கோர்ட்டில் ஆஜராகக்கூடிய அளவுக்கு தற்போது அவரது உடல் நிலை சரியாக இல்லை” என கூறினார்.

அதற்கு நீதிபதி நாசர் அக்பர், “முஷரப் வாக்குமூலம் அளிப்பதற்கு வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளை வீணாக்கி விட்டார். அவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 342-ன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யும் உரிமையை சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு கொண்டு வந்து விட்டது” என்று கூறினார்.

இறுதியில் முஷரப் மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதிய சிறப்பு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை (தூக்கு) விதித்து அதிரடித் தீர்ப்பு அளித்தது.

3 நீதிபதிகளில் 2 பேர் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார்.

ஆனால் பெரும்பான்மை தீர்ப்பு, மரண தண்டனை விதித்திருப்பதால் அதுவே நடைமுறைப்படுத்தப்படும்.

தீர்ப்பின் முழு விவரம் 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக இலங்கையில் தமிழினப்படுகொலை நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response