அடுத்தடுத்து நடந்த 3 முக்கிய நிகழ்வுகள் – பாஜக கடும் அதிர்ச்சி

கடந்த சில நாட்களில் இந்தியாவை ஆளும் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

அவை பற்றிய விவரங்கள்…

1. மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த பாஜக எம்எல்ஏ கிஷான் கதோர் மனுவை வாபஸ் பெற்றதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் சபாநாயகராகப் போட்டியின்றித் தேர்வாகிறார்.

2. அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமஜென்மபூமி நில விவகாரத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் மசூதி கட்டவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாமியத் உலேமா இ ஹிந்து அமைப்பினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வரும் 4-ம் தேதிக்குள் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாஜக பதட்டமடைந்துள்ளது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இந்த மேல்முறையீடு முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

3. பஜாஜ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஆர்ஐஎல் சிஎம்டி முகேஷ் அம்பானி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பாரதி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட உயர்மட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ்,

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தவறுகளை பயமின்றி விமர்சித்தோம். ஆனால் உங்களை விமர்சித்தால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்கிற ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை உள்ளது. விமர்சனத்தை வெறுக்கிறது பாஜ. மத்திய அரசை விமர்சிக்க நிறுவனங்களிடையே நம்பிக்கை இல்லை. எங்களை போன்ற தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து யாரும் பேச மாட்டார்கள். நான் வெளிப்படையாகச் சொல்வேன். ஒரு நல்ல சூழல் உருவாக்கப்பட வேண்டும். மத்திய காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது, ​​நாங்கள் யாரையும் விமர்சிக்க முடியும். ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. நாங்கள் உங்களை வெளிப்படையாக ஆதரித்தால் நீங்கள் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை. இவ்வாறு பேசினார்.

இப்பேச்சு இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response