தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி
ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசு சார்பில் ரூபிமனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உட்பட 23 பேர் போட்டியிட்டனர்.
நாங்குநேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. 278 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டன. இதில் 56 தபால் வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் எண்ணப்பட்டன.
மொத்தம் 299 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 95 ஆயிரத்து 360 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61 ஆயிரத்து 913 ஓட்டுகள் பெற்றார். மொத்தம் பதிவான 56 தபால் வாக்குகளில் 7 வாக்குகள் செல்லாதவை. 17 வாக்குகள் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கும், 19 வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும், 6 ஓட்டுகள் நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணனுக்கும், பிஷப் காட்ப்ரே நோபுள், சுயேட்சை வேட்பாளர்கள் ஹரி நாடார், இந்துராணி, ராகவன், திருமுருகன் ஆகியோருக்கு தலா ஒரு ஓட்டும், 2 ஓட்டுகள் நோட்டாவிற்கும் கிடைத்தது. தபால் வாக்குகளையும் சேர்த்து அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 95 ஆயிரத்து 377 ஓட்டுகள் பெற்று 33 ஆயிரத்து 445 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61 ஆயிரத்து 932 ஓட்டுகள் பெற்றார். வெற்றி பெற்ற ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு பொது தேர்தல் பார்வையாளர் சுனிதா முன்னிலையில் தேர்தல் அலுவலர் நடேசன் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர்கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டார்கள். இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை அய்யூர்அகரம் இ.எஸ் பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது.
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகள் பெற்றார். முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் சான்றிதழை வழங்கினார்.
இவ்விரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி திமுக வாமும் நாங்குநேரி காங்கிரசு வசமும் இருந்த தொகுதிகள். அவற்றை அதிமுக கைப்ப்ற்றியுள்ளது.
தேர்தல் நாளுக்கு முந்தைய இரவில் இரு தொகுதி வாக்காளர்களுக்கும் ஏராளமான பரிசுப் பொருட்களை அதிமுக வாரி வழங்கியதால் இந்த முடிவு என்கிறார்கள்.
புதுச்சேரி காமராஜர் நகர்:
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரசு சார்பில் ஜான்குமார், என்.ஆர். காங்கிரசில் புவனா (எ) புவனேஸ்வரன் உட்பட 9 பேர் போட்டியிட்டனர். லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
11 மேஜைகளில் 3 சுற்றுகளாக 1 மணி நேரத்தில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகளும், புவனாவுக்கு 7,611 வாக்குகளும் கிடைத்தன. 7,171 வாக்கு வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா 620 வாக்குகள் பெற்றார். மற்ற 6 பேரும் நோட்டாவை விட (426 வாக்கு) குறைவான ஓட்டுகள் பெற்றனர். புதுவை காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் ராஜினாமா செய்து எம்.பியானதால் இடைத்தேர்தல் நடந்தது. இப்போது காங்கிரசு மீண்டும் வெற்றி பெற்று அந்த தொகுதியை தக்க வைத்துள்ளது.