பரவை முனியம்மாவின் பரிதாப நிலை

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில் ‘சிங்கம்போல நடந்துவாரான் செல்லப் பேராண்டி’ என்ற பாடலை கம்பீரமாகப் பாடி தமிழ்த் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தவர் ‘பரவை’ முனியம்மா.

தொடர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்தில் நடித்தார்.

அதன்பிறகு அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்ததால் மதுரை பரவையில் மூளைவளர்ச்சி குன்றிய தனது மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

85 வயதான ‘பரவை’ முனியம்மாவுக்கு ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கினார். இதை அறிந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அவருக்கான வைத்திய செலவுக்கு அந்த பணமும் போதுமானதாக இல்லை. கடந்த வாரம், அவரது உறவினர்கள் உதவியால் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந் தார்.

தற்போது மருத்துவச் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக உயிருக்குப் போராடி வருகிறார். வாய் பேச முடியாமல், காதும் கேட்காத நிலையில் உள்ளார். அவரது மகள்கள் வள்ளி, ராக்கு ஆகியோர் அவரை உடன் இருந்து கவனிக்கிறார்கள்.

அவரது மகள் வள்ளியிடம் பேசிய போது, ‘‘படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தபோது அம்மாவுக்கு ஒரே ஆறுதல் எங்க அப்பா வெள்ளைச்சாமிதான். 2014-ல் அவர் இறந்து பிறகுதான் அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. கடந்த வாரம் மதுரை காளவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவர்கள், கிட்னி பழுதடைந்துவிட்டது. இதயத்திலும், நுரையீரலிலும் நீர், கட்டி விட்டது என்றார்கள்.

மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். உணவு எதுவும் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் ஆகாரம்தான் கொடுக்கிறோம். மருத்துவமனையிலும், வீட்டிலும் அம்மா படும் கஷ்டத்தை சகிக்க முடியல.

சிவகார்த்திக்கேயன் மட்டும், அம்மாவை நேரில் வந்து பார்த்து கைச் செலவுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தார். வேறு யாரும் வரல. ராதாரவி சாரும், சரத்குமார் சாரும்தான் ஜெயலலிதாவிடம் அழைத்து சென்றாங்க. அவங்க இல்லாட்டி இந்த 6 ஆயிரம் ரூபாயும் கிடைச்சுருக்காது.

சினிமாவிலும் அம்மா பெருசா சம்பாதிக்கவில்லை. அம்மா நடிச்ச படங்களுக்கு கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை, அவரது மானேஜர் எடுத்துக் கொண்டார் என்றார்.

ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்தவரின் நிலை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

Leave a Response