இந்தியாவில் மோடி தொகுதி முதலிடம் – மக்கள் அதிர்ச்சி

இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்துள்ள நகரமாக, காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தரபிரதேசத்தின் வாரணாசி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நகரம் 2014 மற்றும் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற தொகுதியாகும்.

வாரணாசியைத் தொடர்ந்து 269 புள்ளிகளுடன் லக்னோ இரண்டாவது இடத்தையும், 266 புள்ளிகளுடன் முஸாஃபர் நகர் மூன்றாவது இடத்தையும், 264 புள்ளிகளுடன் ஹரியானாவின் யமுனா நகர் நான்காவது இடத்தையும், 256 புள்ளிகளுடன் உத்தரபிரதேசத்தின் மொரதாபாத் 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமையன்று லக்னோ நகரத்தின் காற்று தரத்தின் அளவு அபாய கட்டமான 294 ஐ தாண்டியது. பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் 269 புள்ளிகளுக்கு குறைந்துள்ளது.

ஆனால், இந்த மாற்றமானது தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வேறு வரவிருப்பதால் அதனைக் கொண்டாட வெடிக்கப்படும் பட்டாசு புகையால், காற்றில் மாசு அளவு மிக அபாய கட்டத்தை தாண்ட வாய்ப்பிருப்பதாக காலநிலை மற்றும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் பேராசிரியர் துருவ்சென் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லியை விட லக்னோவில் காற்றின் மாசு அதிகமாக இருக்கிறது. டெல்லியில் காற்றின் மாசு அளவு தற்போது 207 ஆக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகப்படியான மரம் நடும் திட்டங்கள் மூலம் காற்றின் தரத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் ஆகியவைதான் மாசுபடுத்தும் காரணிகளாக உள்ளதாக, வாரணாசியின் நகராட்சி ஆணையர் ஆஷுதோஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு முறையாக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த வாரணாசி நகரம் தொடர்ந்து மாசடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response