தமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், ஜூன் 23 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலை எதிர்த்தும், இந்தத் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால், அது குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்க சங்கப் பதிவாளர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பதவி காலம் முடிந்த பின்னரும், பழைய நிர்வாகிகளே சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட பிரச்சினையில் தனி அதிகாரியை அரசு நியமித்துள்ளது.

தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விட்டால், நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்புகளும் அந்த தனி அதிகாரியிடம் வந்துவிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிதான் அந்த சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட்டு அதை நிறுத்தவோ அல்லது தள்ளிப்போடவோ மாவட்ட சங்கப் பதிவாளருக்கு முழு அதிகாரம் உள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதன்பிறகு, மேலும் 6 மாதங்களுக்கு பழைய நிர்வாகிகளுக்கு பதவி நீட்டிப்பு செய்ய சங்க விதிகளில் இடமில்லை. 3 ஆண்டுகளுக்கு மேல் எந்த சங்க நிர்வாகிகளும் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என்பதை சமீபத்தில் இதே ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

எனவே, பழைய நிர்வாகிகள், சங்கத்தின் நிர்வாகிகளே இல்லை என்கிறபோது, தேர்தலை நடத்துவதற்காக பழைய நிர்வாகிகள் கூட்டிய கூட்டமும் செல்லாது. அதேபோல அவர்கள் நடத்திய தேர்தலும் சட்டப்படி செல்லாது.

நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு எந்த விதத்திலும் தலையீடு செய்யவில்லை. தனி அதிகாரியும் சட்டப்படியாகத்தான் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

நடிகர் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இ.ஓம்பிரகாஷ்,

ஜூன் 23 அன்று நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் 80 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை பழைய நிர்வாகிகள் பதவியில் தொடர எந்த தடையும் இல்லை. தற்போது நடிகர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது’ என்று வாதிட்டார்.

மேலும் அவர், ‘சங்கத்தின் மீது புகார்கள் வந்தால் அந்த புகார்கள் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் மட்டுமே பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் சங்கத்தின் பதிவைக்கூட அதிகாரிகள் ரத்து செய்ய முடியும். ஆனால், அந்த சங்கத்தின் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டும் தலையிட்டு இருக்காவிட்டால் இந்நேரம் நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருப்பார்கள். இந்தத் தேர்தல் முறைப்படி உரிய பாதுகாப்புடன் நடத்தப்பட்டுள்ளது’ என்று தன் வாதத்தில் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் அட்வகேட் அரவிந்த்பாண்டியன் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு வருகிற 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Response