மோடிக்கு கடிதம் எழுதியவருக்குக் கொலைமிரட்டல்

அண்மைக் காலமாக, வட மாநிலங்களில் “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இதில் பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் “ஜெய் ஸ்ரீராம்” வார்த்தைக்காகவும் “பசு”வுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விசயம்.

இதுதொடர்பாக திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் ஆகிய பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இயக்குநர் மணிரத்னம், ஷியாம் பெனேகல், அனுராக் காஷ்யப், கௌஷிக் சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், முஸ்லீம்கள், தலித்கள், மற்ற சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கும்பல் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தேசிய குற்ற வழக்கு விவரங்களில் அடிப்படையில் கடந்த 2016-ல் மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்ற தகவலால் அதிர்ச்சியடைந்தோம்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளின் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் கூக்குரலாக மாறி வருவதால் பிரதமர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திகிறோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமருக்கு கடிதம் அனுப்பியவர்களில் ஒருவரான கௌஷிக் சென், தனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கௌஷிக், நேற்று எனக்கு ஒரு புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. கும்பல் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை நான் நிறுத்தாவிட்டால், அதற்கான தொடர் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று என்னை மிரட்டினர். என் வழியை நான் மாற்றாவிட்டால் என்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர். ஆனால் நேர்மையாக சொன்னால் இதுபோன்ற மிரட்டல் நான் பொருட்படுத்த மாட்டேன். என்னுடன் கையெழுத்திட்ட மற்றவர்களுக்கும் அந்த செல்போன் நம்பரை அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.

Leave a Response