இந்தியாவின் 62.3 சதவீத மக்களை அவமதித்த ரஜினி – புதிய சர்ச்சை

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவிருக்கிற விழாவுக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு வந்துள்ளது. மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு அவரை மட்டும் ஊடக நிறுவனங்கள் முன்னிலைப்படுத்துவது ஏன்?

இதுதான் பிம்பம் கட்டுகிற வேலை. மோடிக்கும் இதேபோல் பிம்பக் கட்டுமான வேலையைத்தான் பல கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் செய்தன. தமிழகத்தில் ரஜினி பிம்பம் கட்டுகிற வேலையை ஏற்கெனவே தொடங்கிவிட்ட ஊடக நிறுவனங்கள் இப்போதும் அதைத் தொடர்கின்றன என்ற விமர்சனத்தை நானும் ஊடகத்துறை சார்ந்தவன்தான் என்ற முறையில் வைக்கிறேன்.

தமிழகத்தில் மோடி அலை வீசியது, மீத்தேன், கார்பன் ஹைட்ரேட், நீட் போன்ற விஷயங்களில் அந்த எதிர்ப்பு அலை ஏற்பட்டது, அப்படி ஒரு எதிர்ப்பு அலை வீசும்போது அதை எதிர்த்து நிற்க முடியாது என்று, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறாததற்கான காரணத்தைச் சொல்கிறார் ரஜினி. உண்மைதான். ஆனால் அந்த அலையில் இவர் எந்தப் பக்கம்? அலையோடு நிற்கிறாரா, அலையை எதிர்த்து நிற்கிறாரா அல்லது கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறாரா?

நரேந்திர மோடி ஒரு சரிஸ்மாட்டிக் தலைவர் என்று ரஜினி செய்தியாளர்களிடம் சொன்னது பற்றிக் கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜக பெற்ற வாக்குகள் மொத்தம் 37.3 சதவீதம்தான். இதுவரை மத்திய ஆளும் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்திலேயே மிக அதிகம் பாஜகவுக்கு கிடைத்திருக்கிற இந்த 37.3 சதவீதம்தான் என்று ‘தி இந்து’ நாளேடும் பல தேர்தல் ஆய்வு அமைப்புகளும் கூறியுள்ளன.

ஆக 62 .3 சதவீத வாக்காளர்கள் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள். அந்தப் பெரும்பான்மை எதிர்ப்பலையைத் தமிழகம் போல ஒரே சக்தியாக திரட்டுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்த பலவீனத்தைத்தான் பாஜக அறுவடை செய்திருக்கிறது.

என் கேள்வி என்னவென்றால் 62.3 சதவீத வாக்காளர்களை ஈர்க்க முடியாதவர் எப்படி ஒரு சரிஸ்மாட்டிக் தலைவராக முடியும்? அப்படிச் சொல்வதன் மூலம் அந்த 62.3 சதவீத மக்களை இவர் இன்சல்ட் செய்கிறார் என்று கூடச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டுத் தலைமையாக உருவானதுதான் ஆரோக்கியமான சரிஸ்மாட்டிக் அம்சம். இந்தியாவுக்கே முன் உதாரணமாக வந்திருக்கிற அம்சம்.

-காவேரி தொலைக்காட்சியில் ‘மாற்றத்தை நோக்கி’ விவாத நிகழ்ச்சியில் (மே 28) நான் கூறிய கருத்துகளின் சாரம். உடன் பங்கேற்றோர்: நாராயணன் (பாஜக), கௌதம் சன்னா (விசிக), ராம்கி (ரஜினி ஆதரவு எழுத்தாளர்). ஒருங்கிணைப்பு: தைரிய ராஜன்.

-குமரேசன்

Leave a Response