கர்நாடகம் தரவேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரை விட்டுக்கொடுத்த தமிழக அரசு – கொதிக்கும் விவசாயிகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3 ஆவது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 28,2019) நடந்தது.

இதற்கு, இந்த ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். இதில், நான்கு மாநிலங்களையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். தமிழகத்தின் சார்பாக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகரும், தலைமை பொறியாளர் சுப்ரமணியமும் பங்கேற்றனர்.

நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கி மூன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, ‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அது பற்றி இக்கூட்டத்தில் எவ்வித ஆலோசனைகளையும் நடத்தக் கூடாது. மேகதாது தொடர்பான அனைத்து விவகாரம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை ஆணையம் திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ‘ஜூன் மாத பங்கீடாக, தமிழகத்துக்கு கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1 ஆம் தேதி முதல் திறந்து விட வேண்டும். ஜூலை மாதத்தின் பங்கீடான 30 டி.எம்.சி. தண்ணீரையும் கொடுக்க வேண்டும்.

மே மாதம் முடிவதற்குள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழகத்திற்கு ஒவ்வெரு மாதமும் தர வேண்டிய 2 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் உடனடியாகக் கொடுக்க வேண்டும்’ என்றும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதே கோரிக்கை புதுவை, கேரளா அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், “எங்கள் மாநிலத்தில் தற்போதுதான் பருவமழை பெய்து வருகிறது. அதனால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க முடியாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும்,’’ என்றனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழக அரசின் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இதில், முகாந்திரம் இல்லாத எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலும், நீர் திறப்பு குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை, அனைத்து மாநிலங்களும் அடுத்த கூட்டத்தின்போது ஆணையத்திடம் கொடுக்க வேண்டும்,’’ என தெரிவித்தார்.

இந்த உத்தரவை ஏற்று, தனது அணைகளில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டால், ஜூன் மாதம் முதல் வார இறுதியில் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பரிலிருந்து மே (2019) வரை 19.5 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். டிசம்பர் 7.3. டி.எம்.சி, சனவரி 3.00 டி.எம்.சி., பிப்ரவரி – மார்ச்சு, ஏப்ரல் – மே மாதங்களுக்குத் தலா 2.3 டி.எம்.சி திறந்திருக்க வேண்டும். இந்த பாக்கித் தண்ணீரைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் கேட்டதாகத் தெரியவில்லை,

ஜூன் மாத பங்கீட்டைக் கேட்டவர்கள் இதுவரை வரவேண்டிய 19.5 டிஎம்சி பற்றிப் பேசாதது ஏன்?,தமிழகத்தின் உரிமையை இவர்களே விட்டுக்கொடுத்து விட்டார்களா? என்று காவிரிப்பாசன விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Response