தேர்தல் தோல்விக்குப் பிறகு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கை

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட்டது. அக்கட்சிக்கு தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

மே 23 தேர்தல் முடிவுகள் அற்விக்கப்பட்டது. பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.இர்நுத ஒரு தொகுதியும் கைவிட்டுப்போனது.

இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..

தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பல காரணங்கள் உள்ளன. அவை என்னவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்ற அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது. பா.ம.க. தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை.

தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எண்ணி பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடர்ந்து நடத்த தமிழக மக்களின் தீர்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு பா.ம.க. சார்பில் வாழ்த்துகள்.

நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response