2019 நாடாளுமன்றத் தேர்தல் – 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின.
உத்தரப் பிரதேசம் 14, அரியானா 10, பீகார் 8, மத்தியப் பிரதேசம் 8, மேற்கு வங்கம் 8, டெல்லி 7, ஜார்கண்ட் 4 தொகுதிகள் என, 7 மாநிலங்களிலும் உள்ள 59 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
நேற்று நடந்த தேர்தலில்,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
காங்கிரசுத் தலைவர் ராகுல், அவரது தாயாரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், பாஜ வேட்பாளர் கவுதம் கம்பீர், காங்கிரஸ் வேட்பாளர் விஜேந்தர் சிங் உள்ளிட்டோர் டெல்லியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
டெல்லியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது. இதேபோல், டெல்லியில் பல இடங்களில் தங்கள் பெயர்கள் இல்லாததால் வாக்காளர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று தேர்தல் நடந்த மாநிலங்களிலேயே, மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக பதற்றம் காணப்பட்டது. அங்கு நேற்று முன்தினம் இரவே பாஜ – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு, வன்முறையில் முடிந்தன. ஜர்கிராம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜ தொண்டர் ராமன் சிங் (46) என்பவரை, ஒரு கும்பல் அடித்து தாக்கியதில் அவர் டாப்சியா ஊரக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதேபோல், பாகபான்பூர் மற்றும் கிழக்கு மிட்னாபூரில் 2 பாஜ தொண்டர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்று தேர்தல் நடந்த போதும் இம்மாநிலத்தில் பல இடங்களில் பதற்றம் நிலவியது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் பெரியளவில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இதேபோல், பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அதை சரி செய்து வாக்குப்பதிவை தொடங்கினர்.
நேற்று நடந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் சராசரியாக 63 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதல் கட்டமாக தெரிவித்தனர். சில மாநிலங்களில் இரவு வரையில் வாக்குப்பதிவு நடந்ததால், பதிவான வாக்குகளின் உண்மையான சதவீத நிலவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,இந்தத் தேர்தலில் 4 முக்கிய பிரச்னைகள் முன்வைக்கப்பட்டன. இவை மக்களுக்கான பிரச்னைகள். விவசாயிகளின் நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ஊழல் மற்றும் ரபேல் விவகாரம் ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்னைகளாக இருந்தன. இந்தத் தேர்தலில் 2 கட்சிகள் இடையே நல்ல போட்டியைக் காண முடிகிறது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் வெறுப்பை பயன்படுத்தி வருகிறார். ஆனால், காங்கிரஸ் அன்பை உபயோகப்படுத்துகிறது. எனவே, அன்பு தான் வெற்றி பெறும் என நினைக்கிறேன் என்றார்.