அதிமுக பாமக கூட்டணி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் 2019 – தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் வந்தனர்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வந்தனர். அவர்களை முதல்வர் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி, இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பாமகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுகவை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை எழுப்பியவர் ராமதாஸ். இந்நிலையில், அதிமுகவுடன் பாமக கூட்டணி சேருவது இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக – பாமக உடன்பாடு
7மக்களவை தொகுதி + 1 மாநிலங்களவை

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response